சட்டரீதியாக சசிகலாவிற்கு செக்... அடுத்தது என்ன? - பரபர ஆலோசனையில் ஓபிஎஸ், இபிஎஸ்
சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் அதிகாரப் பதவியில் கொண்டு வரவேண்டும் என்று கூறியவர்களின் வாயை அடைத்து விட்டது நீதிமன்ற தீர்ப்பு.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியை சசிகலா பயன்படுத்துவதை சட்டரீதியாக தடுத்தாகி விட்டது. என்று எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் அதிகாரப் பதவியில் கொண்டு வரவேண்டும் என்று கூறியவர்களின் வாயை அடைத்து விட்டது நீதிமன்ற தீர்ப்பு. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இன்றைய தினம் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்
முதல்வராக சசிகலா முயற்சி செய்து அது நிறைவேறவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்தும், அதிமுக சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிடங்கள் உருவாக்கப்பட்டும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுகவில் சசிகலா உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில் 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி சட்ட விரோதம் என்று உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என கூறியது. சசிகலா தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு சசிகலாவை அதிர்ச்சி அடைய செய்தாலும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக சசிகலா கூறினார்.

ஓபிஎஸ், இபிஎஸ் மகிழ்ச்சி
இந்த தீர்ப்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சட்ட ரீதியாக சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உற்சாகத்தில் உள்ளனர்.

அடுத்தது என்ன ஆலோசனை
இந்த நிலையில் அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பாகவும் ஆலோசித்து வருகின்றனர். மேலும் சட்ட ரீதியாக சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக சசிகலா எடுக்கும் நடவடிக்கைக்கு பதில் அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் ஆன்மீக பயணம்
4 ஆண்டு சிறைவாசம் முடிந்த பின்னர் தமிழகம் வந்த சசிகலா சில காலம் அரசியலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்தது இதை அடுத்து அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க தான் அனைத்து மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

அதிர்ச்சியில் சசிகலா
திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்கிறார். நாமக்கல்லில் சாமி தரிசனம் செய்து முடித்த போது அவருக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது.

பொதுச்செயலாளர் பதவி
சசிகலாவிற்கு தீர்ப்பு அதிர்ச்சி அளித்தாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது. கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவோ நீக்கவோ முடியும், இது எம்ஜிஆர் வகுத்து தந்த திட்டம் என்று கூறியுள்ளார்.100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும். ஜெயலலிதாவின் வாக்கை நிறைவேற்றுவதே என் கடமை. எனது 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவும் கடந்து போகும் என்று கூறியுள்ளார் சசிகலா.

ஒற்றைத்தலைமை குரல் இனி எழுமா
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து அதிமுகவில் வி.கே.சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. இரட்டைத் தலைமை வேண்டாம் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற குரல் எழத்தொடங்கியது. சசிகலாவை நீக்கியது செல்லும் என்று இன்றைய தினம் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது சசிகலாவை மட்டுமல்லாது சசிகலா ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இனி சசிகலாவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். இந்த நிலையில் அதிமுக தலைமையகத்தில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications