ஜெயலலிதா சிகிச்சையை 3 வீடியோக்களாக எடுத்தேன்.. ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சசிகலா
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவதை 3 வீடியோக்களாக எடுத்தேன் என ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது: என்ன சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா என்னை வீடியோ எடுக்க சொல்லுவது வழக்கம்.
அதன்படி அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த காலகட்டத்தில் 3 கட்டங்களாக வீடியோ கேமரா மூலமாக அக்காவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை நான் வீடியோ எடுத்தேன்.

மருத்துவமனை
ஜெயலலிதா அடிக்கடி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு போக வேண்டும் என சொல்லி வந்தார். ஆனால் நானும் மருத்துவர்களும் அக்கா பூரண குணமடைந்த பிறகே வீட்டிற்கு போக வேண்டும் என சொல்லி வந்தோம். பிறகே ஆனாலும் வீட்டில் மருத்துவமனையில் இருப்பது போன்ற நவீன மருத்துவ சிகிச்சை கருவிகளை நாம் வைக்க இயலாது என அக்காவுக்கு புரிய வைப்பதற்காகவும் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்து பூரண நலம் பெற்ற பிறகு அக்கா வீடு திரும்ப அவரின் சம்மதத்தை பெறவும் நான் அந்த வீடியோக்களை எடுத்தேன்.

சசி வீடியோ எடு
மேலும் அந்த வீடியோக்களில் ஒரு வீடியோவை அக்காவே "சசி வீடியோ எடு. கழுத்தில் டிரைகாஸ்டமி இருப்பதால் என்னால் கழுத்தை திருப்பி பின்னாடி பார்க்க முடியவில்லை" என சொன்னார். எடுக்கப்பட்ட வீடியோக்களை அக்காவும் பார்த்தார். மேலம் சிங்கப்பூரிலிருந்து வந்த மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த பிஸியோதெரபி மருத்துவர்கள், அக்கா என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வண்டும் என அறிவுரை மற்றும் பயிற்சி வழங்கிய வீடியோக்களையும் நான் பதிவு செய்தேன்.

வீடியோவை பார்த்த ஜெயலலிதா
அந்த வீடியோக்களையும் அவர் பார்த்தார். இந்த சூழலில் அக்கா படிப்படியாக மருத்துவரேகளின் ஆலோசனையின்படி நின்று நடக்க ஆரம்பித்தார். மூச்சுப் பயிற்சியையும் நல்ல முறையில் செய்து வந்தார். ஆனாலும் நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவ குழுவினரால் அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது நுரையீரலில் இருந்து மருத்துவர்கள் சேர்ந்து வரும் திரவத்தை வெளியேற்றுவார்கள்.

போயஸ் தோட்டம்
நான் வாரம் ஒரு முறை போயஸ் தோட்டத்திற்கு சென்று வீட்டு பூஜையறையில் விளக்கு ஏற்றிவிட்டு வருவேன். அவர் விருப்பப்படி பூஜையும் செய்தேன். அவர் மாடி படியேறாமல் இருக்க பெரிய லிப்ட் வைக்கும் ஏற்பாடு செய்தேன். அவர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்க உரிய வசதிகளையும் வீட்டில் செய்து வைத்தேன். இவ்வாறு சசிகலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications