கனமழை: திருவாரூர்,தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் திருவாரூர்,தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று மொத்தம் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்; புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகம், புதுவையில் 8 மாவட்ட பள்ளிகளுக்கு லீவ்
இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனையடுத்து 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிதமான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் எடப்பாடி பகுதியில் சூரியன் கரடு தாலம்புவாடியில் நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் மாணவர்கள் பாறை மேலிருந்து சறுக்கிக் கொண்டு ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக, தெற்கு ஆந்திர, கேரள கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications
