மனைவி கயல்விழியை விசாரணைக்கு வர வேண்டாம் என சொன்ன சீமான்! கடைசி நிமிடத்தில் நடந்த மாற்றம்.. ஏன்?
சென்னை: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகார் விசாரணைக்குச் சீமான் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜரானார். முதலில் சீமான் தனது மனைவி கயல்விழியுடன் போலீஸ் நிலையத்திற்கு வருவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், கடைசியில் அவர் மட்டும் தனியாகவே வந்திருந்தார். சீமான் திடீரென தனது மனைவியை வர வேண்டாம் எனச் சொல்ல என்ன காரணம் என்பது குறித்து சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஒருவர் சீமான் மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாகச் சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்டி சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

சீமான்:
இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இருப்பினும், சீமான் வெளியூர் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததால்.. அவர் மாலை விசாரணைக்கு ஆஜராவார் என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம் கொடுத்தனர். அதன்படி இரவு 8 மணியளவில் சீமான் விசாரணைக்கு ஆஜராகக் கிளம்பினார். இருப்பினும், சில காரணங்களால் போலீசார் அவரை 9.15 மணிக்கு வருமாறு கூறினர். இதனால் வடபழனியிலேயே சீமான் காத்திருந்தார்.
தனியாக வந்த சீமான்
முதலில் சீமான் தனது மனைவி கயல்விழியுடன் விசாரணைக்கு ஆஜராவார் எனச் சொல்லப்பட்டது. இதற்காகவே சீமான் வடபழனியில் முதலில் காத்திருந்தார். இருப்பினும், சற்று நேரத்திற்கு முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்த போது சீமான் தனியாகவே வந்திருந்தார். அவரது மனைவி கயல்விழி உடன் வரவில்லை. சீமானுடன் அவரது வழக்கறிஞர் குழு மட்டுமே வந்திருந்தது. இதற்கிடையே கடைசி நேரத்தில் என்ன நடந்தது சீமான் மனைவி வராமல் போனது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த விசாரணையில் போலீசார் 50க்கும் மேற்பட்ட கேள்விகளைச் சீமானிடம் கேட்கவுள்ளனர். அனைத்திற்கும் விரிவான பதில்களைப் பெறவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தேவைப்பட்டால் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலத்தைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் போலீசார் விசாரணை முடியவே சில மணி நேரம் வரை, நள்ளிரவைத் தாண்டியும் ஆகலாம் என கூறப்படுகிறது..
சீமான் திடீர் மனமாற்றம்
நள்ளிரவு வரை தனது மனைவி காத்திருக்க வேண்டாம் என்பதற்காகவே மனைவி கயல்விழியை சீமான் வர வேண்டாம் எனக் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே சீமான் தனியாக போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போதும் கூட போலீஸ் நிலையம் வரும் சாலையில் அதிகளவில் நாதகவினர் திரண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் நாதகவினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழலும் ஏற்பட்டது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பெரும் போராட்டத்திற்கு பிறகே சீமான் போலீஸ் நிலையம் சென்று சேர்ந்தார்.
பின்னணி
நடிகை ஒருவர் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அவர் முதலில் கடந்த 2011ம் ஆண்டு இந்த புகாரை அளித்திருந்தார். இருப்பினும், அந்த நடிகை அடுத்தாண்டே புகாரை வாபஸ் பெற்றுவிட்டார். இருப்பினும், மீண்டும் 2023ம் ஆண்டு அதே புகாரை அந்த நடிகை அளித்தார். அப்போதும் சில மாதங்களில் மீண்டும் புகாரை வாபஸ் பெற்றார்.
நடிகை பாலியல் புகார் தொடர்பாகச் சென்னை ஐகோர்ட்டில் சீமான் தரப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரணையை முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், சீமான் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், பாலியல் புகார் என்பது தீவிரமானது என்றும் நடிகை வாபஸ் பெற்றாலும் விசாரணையைத் தொடர போலீசாருக்கு அனுமதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு விசாரணையை 12 வாரங்களில் முடித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையிலேயே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications