சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக மலைகளை வெட்டி பாறைகளை தடையின்றி அனுப்ப கோரி கடிதம் அனுப்புவதா? கேரளா அரசுக்கு சீமான் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மலைகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டப் பாறைகளை தடையின்றி கேரளாவுக்கு அனுப்பி வைக்க கோரி அம்மாநில அரசு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் கனிமவளக் கொள்ளையை தடுத்த நிறுத்த கோரி 4 நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியின் போராட்டம் நடத்தி இருந்தனர். அப்போது கனிமவள கொள்ளையால் மலைவளம் அழிகிறது; ஆகையால் இதனை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என முழக்கமிட்டனர்.

Seeman Condemns Keralas letter on TN to help to bring rocks to Vizhinjam port

சட்டசபை தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள், கனிம வளக் கொள்ளையைத் தடுப்போம் என உறுதி அளித்திருந்தன. இந்த நிலையில் விழிஞம் துறைமுக பணிகளுக்கான பாறைகளை தமிழக அரசு தடையின்றி அனுப்ப வேண்டும் என கேரளா முதல்வர் கடிதம் அனுப்பியிருப்பது பிரச்சனையை விஸ்வரூபமாக்கி இருக்கிறது.

இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதானி குழுமத்தால் கேரளாவில் கட்டப்பட்டு வரும் விழிஞம் சர்வதேசத் துறைமுகத்திட்டத்திற்காக தமிழக மலைகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டப் பாறைகளைப் போக்குவரத்துத் தடையின்றி கொண்டு செல்ல அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள கேரள அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. அதனை அம்மாநில சட்டமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ள துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில்‌, அதானி குழுமத்தின் துறைமுகப்பணிகளுக்காக கேரளாவில் 19 குவாரிகளில் அனுமதி கேட்கப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணங்களுக்காக 3 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், கேரளத்தின் தேவைகளுக்காக அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து பாறைகள் கொண்டு செல்லப்படுவதாகக்கூறி, அந்தப்பாறைகளைக் கேரளாவுக்கு எடுத்துச்செல்வதில் தமிழகத்திலுள்ள சில மாவட்ட ஆட்சியர்களால் போக்குவரத்துச்சிக்கல் நேர்வதால், அதைச் சரிசெய்து தர வேண்டுமென்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் கனிமவளங்கள் சூறையாடப்படப்பட்டு முறைகேடாக கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுவதற்கெதிராக மக்கள் தன்னெழுச்சியுடன் நாளும் போராடிக்கொண்டும், வாகனங்களை முற்றுகையிட்டு சிறைப்பிடித்துக் கொண்டுமிருக்கையில், வாகனங்களைக் கொண்டு செல்வதற்கு உள்ள கெடுபிடிகளைத் தளர்த்தக்கோரி கடிதமெழுதியிருக்கும் கேரள அரசின் செயல் கொந்தளிப்பையும், பெரும் சீற்றத்தையும் குமரி மண்ணின் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

வளங்கள் நிரம்பப்பெற்ற கேரள நாட்டில் ஏறக்குறைய 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைகள் நீள்கிறது. ஆனாலும், அங்கு வளர்ச்சித்திட்டங்கள் எனும் பெயரில் மலைகளைச் சிதைக்கவோ, கனிம வளங்களை எடுக்கவோ என எதன்பொருட்டும் இயற்கை மீதான வன்முறையை அம்மாநில அரசு அனுமதிப்பதில்லை.

நான் தமிழக முதல்வராக இருந்தால் ஈழத் தமிழருக்கு குடியுரிமையை மத்திய பாஜக அரசு மறுக்க முடியுமா? சீமான்நான் தமிழக முதல்வராக இருந்தால் ஈழத் தமிழருக்கு குடியுரிமையை மத்திய பாஜக அரசு மறுக்க முடியுமா? சீமான்

கேரளாவின் மலைகளைக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அம்மாநில அரசு, தமிழகத்தில் மட்டும் மலைகளைத் தகர்த்து கனிமவளக் கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முனைப்போடு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எனத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பெனக்கூறி, கேரளத்திலுள்ள குவாரிகளைப் பயன்படுத்த அனுமதி மறுத்து, கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் அம்மாநில அரசு, தமிழகத்தின் வளங்களை மட்டும் வரம்பற்று சுரண்டித் தீர்ப்பது எவ்வகையில் ஏற்புடையதாகும்?

தமிழகத்திலுள்ள பாறைகளை உடைத்து, கனிம வளங்களை அள்ளிக்கொண்டு செல்வதால் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதா? இங்கு சூழலியல் சமநிலைக் கெட்டுப்போகாதா?

அதனை எப்படி தமிழக மக்களால் அனுமதிக்க முடியும்? தரை மட்டத்திற்குக் கீழேயுள்ள குழிப்பாறைகளை இயற்கைக்குப் பாதகமின்றி வரைமுறையோடு பயன்படுத்திட முனைந்தால்கூட அதில் சிக்கலிலில்லை எனலாம்.

ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலையையே மெல்ல மெல்லத் தகர்த்து கேரளாவிற்குக் கனிம வளங்களைக் கடத்திச்சென்றால் அதனை எவ்வாறு ஏற்க முடியும்? அக்கொடுஞ்செயலை எப்படி அனுமதிக்க முடியும்?

'கடவுளின் தேசம்' என தனது நிலத்தை வர்ணித்து, தனது மாநிலத்தில் நிலவளம், நீர்வளம், மலைவளம் என எவற்றையும் பாதுகாத்து, எவ்விதச் சுரண்டலுக்கும் பலிகொடுக்காத வகையில் நிலவியல் கோட்பாட்டை முன்வைக்கும் கேரள அரசு, தமிழகத்தில் கட்டற்ற வளக்கொள்ளையில் ஈடுபட முனைவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

மருத்துவக்கழிவுகளையும், பிற கழிவுகளையும்கூட தன் மாநிலத்திற்குள் கொட்டாது, அதனை தமிழக எல்லைக்குள் கொண்டு வந்து கொட்டி, தமிழகத்தைக் குப்பைத்தொட்டி போலப் பயன்படுத்த முனையும் நயவஞ்சக கேரள அரசு, தமிழகத்தின் மலை வளங்களை தங்களது மாநிலத்தேவைக்காக அழித்தொழிப்பது மிகப்பெரும் மோசடித்தனமாகும்.

நாம் தமிழர் கட்சி, கேரள அரசின் வளச்சுரண்டலுக்கெதிராக குமரியில் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திப் பரப்புரைகளை முன்வைத்ததன் விளைவாக ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு, வேறு வழியற்ற சூழலில் பாறைகளை ஏற்றிச் சென்ற பல கனரக வாகனங்கள் மீது அரசு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் அதனைத் தடுக்க முயன்ற நிலையில் அத்தகைய அதிகார வர்க்கத்தினரைக் கட்டுப்படுத்த வேண்டுமென கேரள அரசு தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதும், அதற்கு தமிழகத்தை ஆளும் திமுக அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஆழ்ந்த அமைதியைக் கடைப்பிடிப்பதும் பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

அதிமுக ஆட்சிக்கு முற்றிலும் மாற்றெனக்கூறி ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக அரசு, மக்களின் போராட்டங்களுக்குப் பிறகும் வளவேட்டையைத் தடுக்காது வேடிக்கைப் பார்த்து நிற்பது வெட்கக்கேடானது. இனியும், இது தொடருமானால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்குமென அரசை எச்சரிக்கிறேன்.

ஆகவே, வளக்கொள்ளையை அரசின் ஒப்புதலோடே செய்ய முயலும் கேரள அரசின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்திட வேண்டுமெனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கனிமவளக்கொள்ளையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தி, மேற்குத்தொடர்ச்சி மலையைக் காத்து, வளக்கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar Party Chief Seeman has Condemned that the Kerala Govt's letter on Tamilnadu shoul help to bring rocks to Vizhinjam port..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X