சீமானின் வருமானம் 1000 அல்ல.. உண்மையான வருமானம் இதுதான்.. மனைவியின் வருமானத்திலும் மாற்றம்.. லிஸ்ட்
சென்னை: திருவெற்றியூரில் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் இப்போது தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு கடந்த 2019-2020ம் நிதியாண்டில் 4.72 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக 1000 ரூபாய் என்று கூறியிருந்தது எழுத்து பிழை என்று கூறியுள்ளார்.
Recommended Video

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்த கடந்த 2019/2020ம் ஆண்டில் தனக்கு 1000 ரூபாய் மட்டுமே வருமானம் வந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் வேட்பு மனுதாக்கல் களைகட்டியுள்ளது. வேட்பு மனுதாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்

திருவெற்றியூரில் போட்டி
அதிமுக, திமுக, மநீம,அமமுக, ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு போட்டியிட காரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதிக்கு உள்பட்ட திருவெற்றியூரில் 17 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருந்தது. அத்துடன் கிளைகள் இங்கு தான் நாம் தமிழர் கட்சிக்கு அதிகமாக உள்ளது. அதனால் போட்டியிடுகிறார்.

1000 மட்டும் வருமானம்
சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில், தமக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என்று கூறியிருந்தார். தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் சீமான் வேட்பு மனுவில் கூறியிருந்தார். மேலும் கடந்த 2016 முதல் 2019 வரை தனக்கு 4 முதல் 5லட்சம் வருமானம் வந்ததாக கூறிய அவர், 2019-2020ம் நிதியாண்டில் 1000 மட்டுமே வருமானம் வந்ததாக கூறியிருந்தார்.

எழுத்துப்பிழை
என்னது சீமானுக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் தான் வருமானமா,.. அதாவது ஒரு நாளைக்கு 2 ரூபாய் 77 பைசா தான் வருமானமா நம்பவே முடியவில்லை என்று பலரும் கிண்டல் செய்தனர். சிலர் சீமானை விமர்சித்து மீம்ஸ் போட்டிருந்தனர். இதுபற்றி அறிந்த சீமான் ஆண்டு வருமான கணக்கு எழுத்துப்பிழையுடன் தவறுதலாக இடம்பெற்றிருப்பதை கட்சியினரிடம் தெரிவித்தார். மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய போவதாக கூறினார்.

கயல்விழி வருமானம்
இந்நிலையில், சீமானின் ஆண்டு வருமானம் 2019-2020ம் ஆண்டில் 1000 அல்ல, 4,72,900 என குறிப்பிடப்பட்டு புதிய பிரமாணப்பத்திரம் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. சீமானுக்கு 2015-16ல் ரூ.4,63,690 வருமானம் வந்தது என்றும், 2016 -2017ம் ஆண்டில் ரூ.3,91,220 வந்தது என்றும், 2017-18ம் நிதியாண்டில் ரூ.4,42,610 வந்தது என்றும், 2018-2019ல் ரூ.4,51,250 வந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. சீமான் மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானமும் புதிய பிரமாணப்பத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016-2017, 2017-2018 நிதியாண்டுகளில் சீமான் மனைவிக்கு வருமானம் இல்லை என இருந்தது. 2016-2017ல் ரூ.2,65,890, 2017-18 ல் 2,82,900 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications