நான் பொதுச்செயலாளர்; இபிஎஸ் - முதல்வர் வேட்பாளர்- அதிமுக இணைப்புக்கு சீமானிடம் சசிகலா சொன்ன பார்முலா
சென்னை: அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளர்; எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என இணைந்து செயல்படலாம்; இதனைத்தான் சசிகலா தம்மிடம் கூறினார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி சேனலுக்கு சீமான் அளித்த பேட்டியில் அதிமுக தொடர்பாக கூறியிருப்பதாவது: அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் இணைவதை எடப்பாடி விரும்பவில்லை என்பதுதான் கணிப்பு. அதிமுகவுக்கு இரட்டை தலைமை இருப்பதால்தான் பலன் அதிகம்.
தென்மாவட்டங்களில் வலுவாக இருக்கக் கூடிய ஒரு சமூகம் தேவர். அந்த சமூகத்தைச் சேர்ந்த சசிகலா, ஓபிஎஸ் வேண்டாம் என்கிறார் எடப்பாடி. இதனால் எப்படிப் பார்த்தாலும் அதிமுக தற்போது ஒரு சமூக காட்சியாக மாறிவிட்டது. இது எப்படி பலன் தரும்? அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தால் என்ன கெட்டுப் போச்சு?

அதிமுக இரட்டை தலைமை
அதிமுக இரட்டை தலைமை நல்லாதான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் என்னமோ பிரச்சனை அவர்களுக்குள்.. என்ன பிரச்சனை என தெரியவில்லை. அதனால் இரட்டை தலைமை சரியாகவராமல் போய்விட்டது. இனி எப்படி அதிமுக போகும் எனவும் தெரியவில்லை. அதிமுக ஒன்றாக சேருவதுதான் நல்லது என்பதை அவர்கள்தான் உணர வேண்டும்.

சசிகலா சொன்னது என்ன?
நான் சசிகலாவை சந்தித்த போது, எடப்பாடி பழனிசாமிதான் அனைவரும் சேருவதை விரும்பவில்லை என்றார். சசிகலாவை சந்திக்கும் போது எடப்பாடி பழனிசாமியுடன் அன்பும் மதிப்பும் இருந்தது. ஆனால் சசிகலாவை பார்த்ததும் அவர் கோபித்துக் கொண்டார் என சொன்னார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி கோபப்பட எதுவும் இல்லை. ஏனெனில் நான் ஒரு தனிக் கட்சி, இயக்கம். நான் தனித்துவமான முடிவு எடுப்பேன். ஒரு உறவின் அடிப்படையில் சந்திக்கிறேன். சசிகலா, தம்பியை பார்க்கனும் என்று சொன்னதால் போய் சந்தித்தேன்.

எடப்பாடிக்கு கோபம்
சசிகலாவுடன் நான் நிறைய விஷயங்களைப் பேசினேன். அப்போதுதான், அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதை எடப்பாடி விரும்பவில்லையே என்றார் சசிகலா. அப்போதுதான், நான் வேண்டுமானால் எடப்பாடியிடம் பேசிப் பார்க்கட்டுமா? என்றேன். அதற்கு, நீங்க பேசிப் பாருங்க என்றார் சசிகலா. ஆனால் எடப்பாடி பழனிசாமி என் மீது கோபப்பட்டார் என்றனர்.

சசிகலா சொன்ன பார்முலா
ஓபிஎஸ்ஸையும் நான் சந்தித்து பேசினேன். எடப்பாடி பழனிசாமி விரும்பினால் அனைவரையும் ஒருங்கிணைக்க சசிகலா தயாராகத்தான் இருக்கிறார். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கட்டும் என்கிறார் சசிகலா. அப்படி என்கிற போது பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு போகலாமே.. ஜெயலலிதா என்னதான் ஆளுமையாக இருந்தாலும் 20,25 ஆண்டுக்கு மேலே அதிமுகவை பாதுகாத்தவர் சசிகலா என்பதை யாருமே மறுக்க முடியாது. கட்சி தலைமை சசிகலா, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி... இதை சசிகலாவும் சொன்னார். இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications