நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; விஜய் மக்கள் இயக்கம் -நாம் தமிழர் கட்சி கூட்டணி? கொதித்த சீமான்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைக்கலாமே என்ற யோசனையை கேட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொதித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யார் யாருடன் கூட்டணி வைப்பது என ஏகத்துக்கும் டென்ஷனான சீமான், வழக்கம் போல் தம்பிகளை தனித்து தேர்தல் களத்தில் இறக்க ஆயத்தமாகிவிட்டாராம்.
இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே நகராட்சி, மாநகராட்சிகளில் சீமானின் பிரச்சார கர்ஜனையை காண முடியும் என்கிறார் நாம் தமிழர் முக்கியப் பிரமுகர் ஒருவர்.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கால அட்டவனை தயாராக உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் அது தொடர்பான அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் வெளியிடக் கூடும். அநேகமாக மழை முழுமையாக ஓய்ந்த பின்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பது உறுதி எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாம் தமிழர்
இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கு இப்போதே வியூகங்கள் வகுத்து தயாராக உள்ளன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது. கடந்தமுறை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக திகழ்ந்தது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் எது பெரிய கட்சி என்ற போட்டியில் நாம் தமிழர் கட்சியும் இடம்பெற்றுள்ளது.

சீமானுக்கு யோசனை
இந்த சூழலில் சினிமா மக்கள் தொடர்பு அலுவர் ஒருவர், விஜய் மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைக்கலாமே என்ற யோசனையை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைக்கேட்ட அவர், அந்தளவுக்கு தனது கட்சி மோசமான நிலையில் இல்லை என்றும் யாருடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை எனவும் கொதித்து விட்டாராம். வெற்றியோ தோல்வியோ தனித்தே களம் காண்பது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.

விஜய் ரசிகர்கள்
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்க தயாராகிவிட்டார்களாம். இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications