சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு டைரியில் ஏகப்பட்ட பூதம்... தினக்கூலியாக வந்து "பவர் ஹவுஸாக" மாறிய சேகர் ரெட்டி.. ஏன் முக்கியம்?

Google Oneindia Tamil News

சென்னை: மீண்டும் தமிழ்நாட்டில் சேகர் ரெட்டி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவரின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது வருமான வரித்துறை இதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர், இருவர் என்று இல்லாமல் மொத்தம் 16 பேருக்கு இந்த நோட்டீஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என்று இரண்டு முக்கிய அதிமுக தலைகளுக்கும் நோட்டீஸ் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த நோட்டீஸ் சென்றுள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது, பணத்தை பதுக்கியது, அதற்கு முந்தைய காலகட்டங்களில் ஒப்பந்ததாரராக அரசியல் தலைவர்களுக்கு பணம் கொடுத்தது என்று சேகர் ரெட்டி மீது ஏகப்பட்ட புகார்களை சிபிஐ ஒரு பக்கம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஒருபக்கம் பதிவு செய்துள்ளது.

இந்த ரெய்டுகளில் சிக்கிய டைரி ஒன்றின் அடிப்படையில்தான் அதிமுகவின் டாப் தலைகளுக்கு நோட்டீஸ் பறந்து உள்ளதாக கூறப்படுகிறது. சேகர் ரெட்டியின் வரவு செலவு கணக்கு டைரியில் இருந்த பெயர்கள் காரணமாக இந்த நோட்டீஸ் சென்று உள்ளது என்கிறார்கள். இதில் வருமானவரித்துறை அடுத்த கட்ட விசாரணைகளை துரிதப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதிமுகவின் டாப் தலைகளுக்கு சிக்கல் ஏற்படுத்தி.. தமிழ்நாடு அரசியலில் கடந்த 5 வருடமாக முக்கிய செய்தியாக இடம்பெற்று இருக்கும் சேகர் ரெட்டி யார்.. அவருக்கும் அதிமுகவின் பெரிய தலைவர்களுக்கும் நட்பு ஏற்பட்டது எப்படி என்று பார்க்கலாம்.

சேகர் ரெட்டி வழக்கில் ஏன் திடீர் ஸ்பீட்.. அதிமுக விஐபிகளுக்கு அதிரடி நோட்டீஸ்.. கை கழுவியதா டெல்லி?சேகர் ரெட்டி வழக்கில் ஏன் திடீர் ஸ்பீட்.. அதிமுக விஐபிகளுக்கு அதிரடி நோட்டீஸ்.. கை கழுவியதா டெல்லி?

 யார் இவர்?

யார் இவர்?

வேலூர் அருகே தொண்டான் துளசி என்ற பகுதியை சேர்ந்தவர்தான் சேகர் ரெட்டி. தெலுங்கு, தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இவர் தொடக்கத்தில் சென்னைக்கு ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு தினக்கூலியாகவே வந்து இருக்கிறார். அதன்பின் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக யூனியன் அளவில் பெரிதாக உயர்ந்து தனக்கு நெருக்கமானவர்களை பணிக்கு எடுக்கும் கான்ட்ராக்டராக மாறியுள்ளார். அப்போதே இவருக்கான அரசியல் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. ரயில்வே யூனியன் தேர்தல்தான் இவரின் முதல் அரசியல் என்று கூற வேண்டும். அப்போதுதான் அதிமுகவில் சிலருக்கு நெருக்கம் ஆகியுள்ளார். இதெல்லாம் 1980களின் மத்தியிலும் இறுதியிலும் நடந்த சம்பவங்கள்.

நெருக்கம்

நெருக்கம்

அங்கிருந்து 1990களில் ஏற்பட்ட அரசியல் நட்புகள் காரணமாக சென்னையில் அதிமுக தலைகளோடு இணைந்து சில தேர்தல் பணிகளை பார்த்து இருக்கிறார். அதன் மூலம் அதிமுக உறுப்பினர் அட்டையும் இவருக்கு கிடைத்துள்ளது. அதிமுகவில் உறுப்பினராக இருந்தாலும் நேரடியாக களத்தில் இருப்பதை விட அரசியல் தலைவர்களுக்கு முக்கியமாக பணிகளை சீக்ரெட்டாக செய்வதுதான் இவரின் ஸ்டைல் என்கிறார்கள். தொடக்க காலத்தில் இவர் பெரிதாக அதிமுக தலைகளுக்கு நெருக்கமாக இல்லை என்றாலும் இவரின் கடவுள் பக்தியும், விசுவாசமும் அதிமுக தலைமையை கவர்ந்து இருக்கிறது.

விசுவாசம்

விசுவாசம்

2000க்கு பிறகுதான் அதிமுக தலைமையின் நேரடி தொடர்பும் இவருக்கு கிடைத்தது என்கிறார்கள். அப்போது அதிமுக ஆட்சிக்காகக் ஜெயலலிதா பெயரில் திருப்பதியில் சேகர் ரெட்டி சிறப்பு பூஜை நடத்தினார். பூஜைகள் மீது அதீத நம்பிக்கை கொண்ட ஜெயலலிதாவிற்கு இது பிடித்துப்போகவே தலைமை இவருக்கு பல முக்கிய பொறுப்புகளை அடுத்தடுத்து வழங்கியதாம். ஒவ்வொரு முறை ஜெயலலிதாவை சந்திக்கும் போதும் லட்டு வாங்கி வருவது, கோவில் பிரசாதம் கொண்டு வருவது.. உங்களுக்கு சிறப்பு பூஜை செய்தேன்.. தேங்காய் இதோ என்று தலைமைக்கு நெருக்கமாக இருந்துள்ளார். இவரின் நெருக்கம் காரணமாக அப்போதைய அதிமுக அமைச்சர்களும் இவருக்கு நெருக்கம் ஆனார்கள்.

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டியின் ப்ளஸ் என்று சொல்ல வேண்டும் என்றால் அவர் எந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு வளைந்து நெளிந்து போக கூடியவராம். ஜெயலலிதா இருந்த போது சரி, சசிகலா சில நாட்கள் அதிமுகவை கட்டுப்படுத்திய போதும் சரி, இபிஎஸ், ஓபிஎஸ் இணை டாப்பிற்கு வந்த போதும் சரி சேகர் ரெட்டி மட்டும் அப்படியே இருந்தார். அவரை அதிமுகவில் யாரும் பெரிதாக பகைக்கவில்லை. எல்லோருடைய குட்புக்கிலும் இவர் இருந்திருக்கிறார்.. இவரின் ரெட் டைரியிலும் அவர்கள் இருந்துள்ளனர் (இதுதான் இப்போது சிக்கலே). இந்த தொடர் நட்புகள் காரணமாக ஓபிஎஸ் உடனும் நட்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஓபிஎஸ் நட்பு

ஓபிஎஸ் நட்பு

ஜெயலலிதாவின் குட் புக்கில் இருந்த காரணத்தால் இவருக்கு திருப்பதி தேவஸ்தான தேவசம் போர்டு உறுப்பினர் பதவியும் கிடைத்தது. அதே சமயத்தில்தான் இவர் தீவிரமாக மணல் எடுக்கும் பிஸ்னஸ் நடத்தி வந்தார். இப்போது தன் மீது வைக்கப்படும் புகார்களுக்கும்.. இவர் தன்னுடைய வருமானம் எல்லாம் மணல் விற்பனையில் வந்தது என்றே குறிப்பிட்டு உள்ளார். ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத நேரத்தில் ஓ பன்னீர்செல்வமுடன் மிக நெருங்கிய நண்பராக சேகர் ரெட்டி இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்த முதல்வராக ஓ பன்னீர்செல்வம் வரலாம் என்று கணித்து அவருடன் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்று திருப்பதியில் மொட்டை போட்டு பூஜையும் நடத்தினார்கள்.

பூஜை

பூஜை

இந்த புகைப்படமும் இணையம் முழுக்க வைரலானது. அப்போலோவிலும் இதற்காக சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில்தான் ஜெயலலிதா மரணத்திற்கு பின் நடந்த பல்வேறு ரெய்டுகளை தொடர்ந்து சேகர் ரெட்டியும் ரெய்டில் சிக்கினார். இந்த ரெய்டு சாதாரணமாக பண பதுக்கல் என்று இருந்தால் பெரிதாக பிரச்சனை ஆகி இருக்காது. ஆனால் இவருக்கு நெருக்கமாக இருந்ததாக தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் கூட அப்போது ரெய்டு நடத்தப்பட்டது. இதுதான் தேசிய அளவில் இந்த ரெய்டு கவனம் பெற காரணமாக மாறியது.

தினக்கூலி

தினக்கூலி

சாதாரண ரெயில்வே பணிக்கு வந்தவர் 10 வருடங்களுக்கும் மேலாக அதிமுக ஆட்சியில் முக்கிய பவர் ஹவுஸாக இருந்ததாக கூறப்படுகிறது. இவரின் டைரியில் இருந்த பெயர்கள்தான் தற்போது அனைத்து சர்ச்சைகளுக்கும் காரணம். டைரியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்ற தலைவர்களுக்கு ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டதா? கொடுக்கப்பட்டது என்றால் ஏன் கொடுக்கப்பட்டது? பணமதிப்பிழப்பிற்கு பின் இவரிடம் எப்படி பல கோடி 2000 ரூபாய் நோட்டுகள் வந்தன? யாருக்கு எல்லாம் இவர் பணம் மாற்ற உதவி செய்தார்? என்று பல மர்மங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் இந்த வழக்கை வருமான வரித்துறை தூசி தட்டி உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்களால்.. மீண்டும் பல பூதங்கள் இதில் இருந்து வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sekar Reddy Diary and Controversy: How he rose to top and become close with AIADMK top brass.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X