“டிடிவி தினகரன், ஓபிஎஸ் தவெக உடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை”.. போட்டு உடைத்த செங்கோட்டையன்
கோவை: அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், முன்னாள் முதல்வர் ஓபன்னீர்செல்வம் ஆகியோர் தவெக உடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை தான் தவெக நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அதேசமயம் கூட்டணி குறித்து எப்போது அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக பாஜக தலைமையிடம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் நேற்று ஒ.பன்னீர்செல்வம் தனது நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைப் படு பாதாளத்திலே தள்ளி வைத்து இன்றைக்கு அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் வெம்பி வதங்கி என்ன செய்வது என்றே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையை உருவாக்கிய பழனிசாமிக்கு வருகின்ற காலங்களில் நாம் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்" எனப் பேசி இருக்கிறார்.
அடுத்தகட்டமாக தவெக கூட்டணியை நாடுவது என ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாகிகள் கூட்டத்தில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் தவெக கூட்டணிக்கு செல்லலாம் எனக் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விஜய் குறித்து பாசிட்டிவாகவே பேசி வருகிறார். தமிழகத்தில் எங்களை தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது.கூட்டணிக்கு வரவேண்டும் என தற்போது எங்களை அணுகி வருகிறார்கள். எங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் நான் செய்வேன். பிப்ரவரியில் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பிறகு எங்களது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனக் கூறி வருகிறார்.
இந்நிலையில் தான் தவெக உயர்மட்ட நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஓபிஎஸ் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் நடத்திய ஆலோசனையின் படி, எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று உறுதி அளித்திருக்கிறார். விரைவில் நல்ல முடிவை எடுப்பார்.
இந்த பொங்கலுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை பார்க்கலாம். பொங்கலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பலரும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வர இருக்கிறார்கள். அமமுகவும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. வரும் 27, 28 மலேசியாவில் தனது படம் தொடர்பான நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ள இருக்கிறார். அதன் பிறகு எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பது அறிவிக்கப்படும்.
கட்டுப்பாடுகள் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் அதையெல்லாம் தாண்டி மக்களின் மனதில் அவர் நின்று கொண்டிருக்கிறார். 2026ஆம் ஆண்டு அவர் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது. கூட்டம் கூட்டுவதற்கு அனைவரும் செலவு செய்கிறார்கள். ஆனால் செலவே செய்யாமல் அவருக்கு கூட்டம் கூடுகிறது. எதிர்கால தமிழகத்தை விஜய் ஆளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், முன்னாள் முதல்வர் ஓபன்னீர்செல்வம் ஆகியோர் தவெக உடன் பேசிக்கொண்டிருப்பதாக தவெக நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. வரும் நாட்களில் இந்தப் பேச்சுகள் களத்தில் அனலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications