செங்கோட்டையன் கருத்து.. யார் யாரெல்லாம் ஆதரவு.. இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரிந்த தலைவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் கருத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரடியாக எதிர்க்காத நிலையில் மறுபக்கம் அதிமுக முன்னாள் நிர்வாகிகள், பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு எழுந்துள்ளது. இது, எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து நெருக்கடிகள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் உள்ளிட்ட பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

செங்கோட்டையன் கெடு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,அதிமுக முன்னாள் நிர்வாகிகள், பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு எழுந்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்
செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இயங்கி கொண்டிருக்கிறார். கட்சிக்காக கடுமையாக உழைத்தவர். அதிமுகவை ஒன்றிணைப்போம் என்று அனைவர் மனதின் குரலை அவர் பதிவு செய்துள்ளார். அதிமுகவை ஓன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். அதே நோக்கத்தில் தான் நாங்களும் போராடி வருகிறோம்.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா:
"அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். கட்சிக்கு பல்வேறு நெருக்கடியான சூழலில் உறுதுணையாக நின்றவர். அவர் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தொண்டர்கள், மக்களின் மனநிலையை செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளார்."
ஆடிட்டர் குருமூர்த்தி:
"செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை. செங்கோட்டையன் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த கருத்தும் சொல்லவில்லை. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பது எப்படி கலகம் ஆகும். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக செங்கோட்டையனை எதற்கு தவறு சொல்ல வேண்டும்."
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்:
"அதிமுக கட்சி மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். ஒன்றிணையாவிடின் அது முடியாது என்பதை அனைவரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இதைப்பற்றி வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அப்படிப்பட்ட தொண்டர்களின் எண்ண ஓட்டங்களை, செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளார். அது மிகவும் வரவேற்கத்தக்கது."
முன்னாள் எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமி:
"செங்கோட்டையனின் கருத்து வரவேற்கத்தக்கது. இதை கடந்த 3 வருடங்களாக நான் கூறி வருகிறேன். எடப்பாடி பழனிசாமிக்காக யாரும் அதிமுகவில் இணையவில்லை. தனது சுயநலத்தை விட்டு அவர் கட்சியை வலிமையாக உருவாக்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அவர் அனைவரையும் அரவணைத்து, ஒன்றிணைத்து செல்ல வேண்டும்."
முன்னாள் எம்பி ஓபி ரவீந்திரநாத்:
"கழக முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனின் கருத்து ஒவ்வொரு தொண்டனின் அடி மனதில் குவிந்திருக்கும் விருப்பம். இதை தொண்டனாக மனதார வரவேற்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கனவுகளை நனவாக்க, கட்சியை வலிமைப்படுத்தி அனைத்து உண்மை தொண்டர்களும் விருப்பு, வெறுப்புகளை விலக்கி ஒன்றிணைவோம். வென்று காட்டுவோம்."
அதிமுக உரிமை மீட்பு குழு புகழேந்தி:
"அதிமுக தொண்டர்கள் சொல்வதையே செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். புதிதாக எதுவும் சொல்லவில்லை. அவர் இதை நேரடியாக எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லியிருக்கலாம். எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார் என்பதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்க வேண்டும். செங்கோட்டை சொல்லியே கேட்காதவர், செங்கோட்டையன் சொல்லி கேட்பாரா."
இதேபோல அதிமுக உரிமைகள் மீட்பு குழுவினர், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் செங்கோட்டையனின் கருத்தை ஆதரித்துள்ளனர்.
செங்கோட்டையனின் இந்தக் கருத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யாரும் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. செல்லூர் ராஜு, ஆர்.பி உதயக்குமார் ஆகியோரிடம் செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டனர். அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி சொல்வதை கேட்போம் என்று சொல்லியுள்ளார்.
செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது, பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது தொடர்பாக தன்னுடன் வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 6 முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது வலியுறுத்தியதாகவும், அதை அவர் ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த 6 முன்னாள் அமைச்சர்களில் 3 பேர் (செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி) கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.
தன்னுடைய சொந்த மண்டலத்தில் உள்ள நிர்வாகிகளே அவருக்கு எதிரான மனநிலையில் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலுமணி மகன் திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு எதிராக குரல் கொடுத்தது வேலுமணி, தங்கமணிதான். அந்த கொங்கு லாபி தான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமர வைத்தது. மேலும் பாஜகவில் அண்ணாமலை உள்ளிட்டோரும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் செங்கோட்டையனின் கருத்து எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications