“அமலாக்கத்துறை வாதமே செல்லாம போச்சு”.. ED சொன்ன காரணத்தை வைத்தே திருப்பி அடிக்கும் செந்தில் பாலாஜி!
சென்னை: அமலாக்கத்துறை தொடர்ச்சியாக முன்வைத்து வந்த வாதத்தை வைத்தே இன்று கவுன்ட்டர் அட்டாக்கில் இறங்கியுள்ளது செந்தில் பாலாஜி தரப்பு. செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்மயா சுந்தரம் பரபர வாதங்களை எடுத்து வைத்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அதன் பின்னர், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டன, 19-வது முறையாக பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
முன்னதாக இந்த வழக்கில், ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. செல்வாக்கு மிக்க அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
இன்று மீண்டும் விசாரணை: நீண்ட காலமாக சிறையில் உள்ளதாக செந்தில் பாலாஜி தான், விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்துகிறார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான பணப்பரிமாற்ற எதிரான தடைச் சட்ட வழக்கின் விசாரணையை துவங்க தயாராக இருக்கிறோம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து விலகல்: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, இன்று மதியம் விசாரணைக்கு வந்த நிலையில், நேற்று முன் தினம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. அவரது ராஜினாமாவை முதல்வர் ஸ்டாலின் ஏற்று, ஆளுநருக்கு பரிந்துரை செய்த நிலையில் ஆளுநர் நேற்று காலை, செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றார்.
இதுநாள் வரை இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வந்த நிலையில், தற்போது அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார் செந்தில் பாலாஜி. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறையின் வாதம் செல்லாது: அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அடுக்கடுக்கான வாதங்களை வைத்தார். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று தான் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக வாதம் வைத்து வந்தது. அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. எனவே, அவருக்கு இப்போது ஜாமீன் வழங்க வேண்டும் என ஆர்யமா சுந்தரம் வாதங்களை வைத்தார்.
பரபர வாதம்: இலாகா அமைச்சராக நீடிப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமீன் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி ஜாமீன் மறுக்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
வெளிநாடுகளுக்குப்தப்பி விடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தங்கள் தரப்பு வாதத்தை நிறைவு செய்தார்.
நாளை மீண்டும்: மேலும், வழக்கு தொடர்பான புலனாய்வு நிறைவடைந்துவிட்டதாகவும் அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்துவிட்டதாகவும் அமலாக்கத்துறை கூறிவிட்டது என்றும் கோர்ட்டில் பதிவு செய்தார் ஆரியமா சுந்தரம். செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்க, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications