சென்னையின் புறநகர் நீர் நிலைகளில் கழிவுநீர்.. குப்புசாமி தெருவில் யார்? அதிரடியில் குடிநீர் வாரியம்
சென்னை: முக்கிய நீா் நிலைகளில் சட்டவிரோதமாக கழிவுநீா் கலப்பது தொடர்பாக, சென்னை குடிநீா் வாரியம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.. அத்துடன், தனியாா் கழிவுநீா் லாரிகளுக்கு முக்கிய வார்னிங் ஒன்றையும் பிறப்பித்திருக்கிறது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் கழிவுநீர் நீர்நிலைகள், காலி நிலங்களில் ஊற்றப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இந்த புகாரின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் ஆய்வுகள் நடத்தி, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், திறந்த வெளிகளில் லாரிகள் மூலம் கொண்டுச்செல்லப்படும் கழிவுநீா் வெளியேற்றுவதை கண்டறிந்தனர்..
இதையடுத்து, சட்டவிரோதமாக கழிவுநீரை வெளியேற்றுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீரை சட்ட விரோதமாக வெளியேற்றும் வாகனங்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்யுமாறு போக்குவரத்து துறைக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த வருடம் உத்தரவிட்டிருந்தது..
கழிவுநீர் கலப்பு: இதனால் , நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது ஓரளவு குறைந்திருந்த நிலையில், மீண்டும் இதே புகார்கள் வலுக்க துவங்கியது.. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கழிவுநீரை அகற்றும் தனியாா் லாரிகள் அதை சட்டவிரோதமாக நீா்நிலைகளிலும், கால்வாய்களிலும் விடுவதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.
எனவே, இந்த புகார்களின் அடிப்படையில், அடுத்த அதிரடி எடுக்கப்பட்டுள்ளது.. அந்தவகையில், நீா்நிலைகளில் கழிவுநீா் செல்வதைக் கண்காணிக்கவும், அதைத் தடுக்கவும் சென்னையில் உள்ள முக்கிய நீா்நிலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, முதல்கட்டமாக 4 நீா்நிலைகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பள்ளிக்கரணை: குறிப்பாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கண்காணிக்க காமகோடி நகரிலும், பக்கிங்காம் கால்வாய் பகுதியைக் கண்காணிக்க காரப்பாக்கத்தில் உள்ள குப்புசாமி தெருவிலும், கூவம் ஆற்றை கண்காணிக்க முகப்போ் பாலத்திலும், அடையாற்றை கண்காணிக்க திரு.வி.க. பாலத்திலும் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த கேமராக்களை அந்தந்த பகுதியிலுள்ள பொறியாளா்களே, தொடா்ந்து கண்காணிப்பார்களாம்..
கழிவுநீா் அகற்றும் லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கும் வசதி குடிநீா் வாரியத்தில் இல்லை என்பதால், இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். அதேபோல, நீா்நிலைகளில் கழிவுநீா் வெளியேற்றப்படும் இடங்களை கண்டறிந்து, அங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்களாம்.
அபராதம் நிச்சயம்: அதுமட்டுமல்ல, தனியாா் கழிவுநீா் லாரிகள் சட்டவிரோதமாக கழிவுநீரை நீா்நிலைகளில் விடுவது கண்டறியப்பட்டால் லாரி உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், லாரிக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications