ஆளுநரை வெளியேற்றனும்.. சட்டசபையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுங்க.. ஒரே போடாக போட்ட வன்னிஅரசு!
சென்னை : வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநரை வெளியேற்றக்கோரி தீர்மானம் இயற்ற வேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதான கருத்துகளைப் பேசி வருவது அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் கருத்தரங்கு நடத்தி மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் கொள்கைப் பிரச்சாரம் செய்யும் ஆளுநரை வெளியேற்றக்கோரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் விசிகவின் வன்னிஅரசு.

ஆளுநர் மாளிகை
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' எனும் திட்டத்தின் கீழ் 2 நாள் கருத்தரங்கு நேற்றும் இன்றும் நடைபெற்றது. மாணவர்கள் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், ஆளுநரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் வி.பாட்டில் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

ஆன்மிகமே நம் நாட்டின் ஆன்மா
இந்தக் கருத்தரங்கில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஆன்மிக கலாச்சாரமே நமது நாட்டின் ஒட்டுமொத்த ஆன்மாவாக விளங்குகிறது. காலனிய சக்திகள் நமது கலாச்சார அடையாளங்களை அழிக்க முனைந்தன. பழைய புனைவுகளை சொல்லி நமது கலாச்சாரத்தை அழிக்கப் பார்த்தனர். நாட்டின் விடுதலைக்குப் பிறகு பாரத தேசத்தை புரிந்து கொள்ளும் தன்மையை அரசமைப்பு சட்ட வகைக்குள் மட்டுமே சுருக்கி விட்டனர். 5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என்று சுருக்கிவிட்டனர்." எனப் பேசினார்.

ஆளுநர் + சர்ச்சை
இதற்கு காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல்முறை அல்ல. தமிழக ஆளுநராக அவர் பதவியேற்றது முதல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாஜகவின் கொள்கைகளைப் பேசி வருகிறார். இந்து மதம், சனாதன தர்மம் பற்றிப் பேசும் ஆளுநர், சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பற்றி சில மாதங்களுக்கு முன்பே விமர்சித்திருந்தார்.

தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக
தேசிய கல்விக்கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார் ஆளுநர் ரவி. அவருடன் ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆளுநர் மாளிகையிலேயே பிரதமர் மோடி, பாஜக தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கிடப்பில்
மேலும், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுகவின் எம்.பியான டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் பேசியதும் நடந்தேறியது. ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், துணைவேந்தர் மசோதாவையும் நிறைவேற்றியது திமுக அரசு. இப்படி தொடர்ந்து திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே முட்டல் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ் கொள்கையை செயல்படுத்தும் இடமா?
இந்நிலையில், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் கொள்கைப் பிரச்சாரம் நடத்தும் இடமாக மாற்றுவதா என கண்டனங்கள் கிளம்பியுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரே பாரதம் ஒரே பண்பாடு என்ற பெயரில் கருத்தரங்கத்தை ராஜ்பவனில் நடத்துகிறார் ஆர்.என்.ரவி. ஆளுனர் மாளிகை என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை செயல்படுத்தும் அலுவலகமல்ல.

ஆளுநரை வெளியேற்ற
தமிழ்நாட்டு மக்களின் நலனை, உரிமைகளை பாதுகாக்க தங்கி பணி செய்யும் இடம். ஆனால் ஆளுனரான ரவி அதைத்தவிர மற்ற சங்கத்துவ பணிகளை செய்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். ஆகவே, வரும் 17ஆம் தேதி கூடவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுனரை வெளியேற்றக்கோரி தீர்மானம் இயற்ற வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications