‛‛காவி சங்கி’’ கும்பலுக்கு உரிய பதிலடி! சீமானை தொடர்ந்து ஆ ராசாவுக்கு ஆதரவு கொடுக்கும் வேல்முருகன்
சென்னை: ‛‛திமுக எம்பி ஆ ராசா மனு ஸ்மிருதியில் இருப்பதை தான் பேசியுள்ளார். இந்து மக்கள், இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பேச வில்லை. ஆ ராசா குறித்து அநாகரீகமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் தொடர்ந்து ‛‛காவி சங்கி'' கும்பல்கள் பேசி வருவது ஏற்புடையதல்லை. இது தொடர்ந்தால் உரிய பதிலடி கொடுக்கப்படும்'' என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி தொகுதி எம்பியாகவும், திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும் இருப்பவர் ஆ ராசா. இவர் சமீபத்திய பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாஜக, அதிமுக, அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தினமும் இந்த பிரச்சனை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது.

ஆ ராசா பேசியது என்ன?
ஆ ராசா பேசிய வீடியோவில், ‛‛நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்களா? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்'' என்ற வகையில் பேசி இருந்தார்.

ஆ ராசாவுக்கு ஆதரவு
இந்த பேச்சை கண்டித்து இந்து அமைப்பினர், பாஜகவினர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு நடுவே ஆ ராசாவுக்கு ஆதரவாகவும் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான தி வேல்முருகன், ஆ ராசாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் காவிக்கும்பலுக்கு உரிய பதிலடி தரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உரிய பதிலடி
இதுதொடர்பாக தி வேல்முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மக்களவை உறுப்பினரருமான திரு ஆ. ரசார் ‛‛மனு ஸ்மிருதியில்'' குறிப்பிடப்பபட்டுள்ளதை தான் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூறினாரே தவிர இந்து மக்களையோ இந்து மதத்தையோ புண்படுத்தும் வகையில் பேசவில்லை. ஆ ராசா குறித்து அநாகரீகமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் தொடர்ந்து ‛‛காவி சங்கி'' கும்டல்கள் பேசி வருவது ஏற்புடையதல்ல கடுமையான கண்டனத்திற்குரியதாகும். ஆ ராசா குறித்த சங்கி கும்பல்களின் அவதூறு பிரச்சாரம் தொடருமானால் உரிய பதிலடி கொடுக்கப்படும்'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.

சீமானை தொடர்ந்து வேல்முருகன் ஆதரவு
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆ ராசாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார். பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த திமுகவின் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. ஆ.ராசாவை குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என சீமான் கூறியிருந்தார். சீமானை தொடர்ந்து தற்போது வேல்முருகன், ஆ ராசாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications