குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - திமுக - தவெக- நாம் தமிழர் என பிரதானமாக நான்கு கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. இதனால் நான்குமுனை போட்டி நிலவுவதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதே நேரத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு கொண்ட சசிகலா ராமதாஸ் ஒரு அணியாகவும், தென்மாவட்டங்களில் முக்கிய வாக்கு வங்கியான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமி தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் 6 முனைப் போட்டி உருவாகி இருக்கிறது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக சட்டசபை தேர்தல் களம். இதுவரை அடுத்தடுத்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்ததில்லை என்ற மோசமான சாதனையை தகர்க்க மிக பெரும் கூட்டணி பலத்தோடு களமிறங்கி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
மறுபுறம் அடுத்தடுத்து இரண்டு முறை தோற்றதில்லை என்ற சாதனையை தக்க வைக்க போராடி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரது அணியிலும் பத்துக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இருக்கிறது. இது தவிர வழக்கம் போல் தனித்துப் போட்டி என 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.

2026 சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் தமிழக அரசியலின் புதிய வரவாகவும் முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் விஜய் நேற்று தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்ததோடு தானும் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என தேர்தல் அறிக்கைகளை அறிவித்து களத்தை சூடாக்கி உள்ளன. சொல்லப்போனால் தமிழக அரசியலில் தற்போதைக்கு நான்கு முனை போட்டியை நிலவுகிறது.
சசிகலா ராமதாஸ் கூட்டணி
அதே நேரத்தில் 'குறுக்க இந்த கௌசிக் வந்தா' என்பது போல தமிழக அரசியலில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி வரும் சசிகலாவும் ராமதாஸும் இந்த தேர்தலில் தனித்து விடப்பட்டதால் வேறு வழியின்றி தனி அணி அமைத்து போட்டியிடுகின்றனர். சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகமும், ராமதாஸ் அணி பாமகவும் ஒன்றாக கூட்டணி சேர்ந்து தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக கூறி சில தொகுதிகளில் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளனர்.
முக்குதலத்தோர் - வன்னியர் வாக்கு
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சசிகலாவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும் அவர் பின்னால் அணி வகுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியலில் மிக மூத்த அரசியல்வாதியான ராமதாஸுக்கு மேற்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் வன்னியர் வாக்கு அதிகம் உண்டு.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
தற்போது மகனால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு என ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. இதனால் வடமாவட்டங்களில் அய்யா ராமதாஸ், தென் மாவட்டங்களில் சின்னம்மா சசிகலாவும் ஓரளவு வாக்கு வங்கியை கொண்டிருப்பார்கள் இதனால் நாம் ஐந்து முறை போட்டியாக ஏற்றுக் கொள்ளலாம். இது ஒருபுறம் இருக்க திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளால் கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்பட்டு தற்போது தனியாக போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.
6 முனைப் போட்டி
நீண்ட காலமாக அரசியலில் பயணிக்கும் அவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். சமீபத்தில் அவரது மதுரை மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதையும் கவனிக்க வேண்டும். தற்போது அவரும் 60 முதல் 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியென அறிவித்திருக்கிறார். நிச்சயம் ஏதாவது ஒரு கட்சி தோற்பதற்கு சில தொகுதிகளில் கிருஷ்ணசாமியும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை 6 முனைப் போட்டி இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications