அடிதூள்.. சென்னைக்கு புதிதாக 6 முக்கிய மேம்பாலங்கள்! அதுவும் இன்னும் சில மாதங்களில்! தெறி மாஸ் தகவல்
சென்னை: தலைநகர் சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் நடவடிக்கையாக இந்தாண்டு இறுதிக்குள் பல மேம்பாலப் பணிகளை முடிக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் டிராபிக் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகக் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது.

இருப்பினும், தேவையில்லாத இடங்களில் கூட மேம்பாலங்கள் கட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்தத் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்தது.
மேம்பாலங்கள்: இதற்கிடையே நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கடந்த 2021 முதல் 2023 வரை சென்னை மாநகராட்சி 10 மேம்பால திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது. அதில் 6 திட்டங்களை இந்தாண்டிற்குள் முடிக்கச் சென்னை கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது. மற்ற துறைகளுடன் இணைந்தே இந்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதே தாமதத்திற்குக் காரணமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "உதாரணமாக, கார்ப்பரேஷன் எலிஃபான்ட் கேட் பகுதியில் சென்னை மாநகராட்சி தனது பெரும்பகுதி கட்டுமானத்தை முடித்துவிட்டது. இத்திட்டத்தை தெற்கு ரயில்வே உடன் நாம் மேற்கொள்ளும் நிலையில், அந்த பணிகள் நிறைவடையக் காத்திருக்கிறோம். மேலும், சாலை அமைக்கும் பகுதிகளும் ஒரு புறம் நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் ஒரு வழியில் பாதை முழுமையாகத் தயாராகி விடும்" என்றார்.
கிளாம்பாக்கம் உட்பட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது! தமிழக அரசு எச்சரிக்கை
கட்டுமான பணிகள்: தமிழ்நாடு அரசு இந்த மேம்பாலத்திற்கு ரூ.30.78 கோடியை ஒதுக்கீடு செய்த நிலையில், இந்தப் பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2021 ஜனவ.20ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதியைச் சென்னை காப்ரேஷன் கட்டும் நிலையில், மற்றொரு பகுதியைத் தென்னக ரயில்வே கட்டும் என முடிவு செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இந்த மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல சென்னையில் வார்டு 98இல் ஆஸ்பிரான் கார்டன் இரண்டாவது தெருவில் ஓட்டேரி நுல்லாவின் குறுக்கே அமைக்கப்படும் பாலத்தின் கட்டுமான பணிகளும் சில மாதங்களில் முடிவடையும் எனத் தெரிகிறது.
நிதிப் பற்றாக்குறை: மேம்பாலங்கள் கட்டுமானத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பது உண்மைதான் என்றாலும் அதைச் சமாளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மூலதன நிதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வசூலிக்கப்படும் சொத்து வரியைப் பயன்படுத்தி பாலங்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அதேநேரம் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு பிறகே, பணிகளைத் தொடங்க நிர்வாக அனுமதி வழங்கப்படும். உதாரணமாக கொருக்குப்பேட்டை 2ஏ லெவல் கிராசிங்கில் சுமார் ரூ. 75 கோடி மதிப்பிலான மேம்பால திட்டம் அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு தற்போது நிதி இல்லை என அரசு கூறுகிறது. இதற்கான நிதி விடுவிக்கும் முன்பு அங்குக் கட்டப்பட்டு வரும் 2பி லெவல் கிராசிங்ஸ் பணிகள் முடிக்கப்படும்" என்றார்.
சமாளிக்க வழிகள்: நிதி பற்றாக்குறை காரணமாக மாற்று வழிகள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். உதாரணமாக கொருக்குப்பேட்டை லெவல் கிராசிங் பகுதியில் ரயில் மேம்பாலம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஆனால், ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் சாய்வுப் பாதையை அமைத்தால் மட்டுமே இந்த மேம்பாலத்தை அமைக்க முடியும். இதற்கான ஒப்புதலைப் பெறக் கோப்புகள் ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால், 2ஏ லெவல் கிராசிங்கின் தேவை இல்லாமல் போகும்.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க இதுபோல மாற்றுத் திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகிறது. குறிப்பாக வட சென்னையில் இப்போது வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், அங்கே பல திட்டங்கள் ஒப்புதல் மற்றும் நிதிக்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்கக் கிடைக்க உடனடியாக டெண்டர் விடுத்து கட்டுமான பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
6 மேம்பாலங்கள்: பணிகளை படுவேகமாக மேற்கொள்ளச் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சிறிதும் பெரிதுமாக இந்தாண்டு இறுதிக்குள் 6 மேம்பாலப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளது. நிதி சிக்கல் இருந்தாலும் கூட அதையும் சமாளிக்க பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications