சின்ன வெங்காயம் விலை ரூ.250.. 80% வரத்து குறைவு.. தை மாதம் வரை காத்திருக்க வேண்டுமா?
சென்னை: சின்ன வெங்காயம் இல்லாத சமையலே குறைவு.. தினமும் சமையலுக்கு முக்கியமாக தேவைப்படுவதே வெங்காயம்தான்.. ஆனால் இனி இந்த வெங்காயம் வாங்க அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆம், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இதன் விலை கிலோ ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக வரும் வெங்காயத்தில் 80 சதவீதம் குறைந்துள்ளதால், வரும் நாட்களில் விலை இன்னும் உயருமா என்ற கவலை இல்லத்தரசிகள் மத்தியில் இப்போதே ஏற்பட்டுள்ளது. ஏன் இந்த விலை உயர்வு?
தமிழக மக்களின் சமையலில் சின்ன வெங்காயத்துக்கென ஸ்பெஷல் இடம் உண்டு. சாம்பார், குழம்பு உள்ளிட்ட பல உணவுகளில் இதை பயன்படுத்துகிறார்கள்..

சென்னை, திருச்சி, சேலம் - வியாபாரிகள்
இந்தியாவிலேயே நம்முடைய தமிழகத்தில்தான் சின்ன வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. திருச்சி, பெரம்பலூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
வழக்கமாக தினமும் 8 முதல் 10 லாரிகளில் சுமார் 100 டன் சின்ன வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. தற்போது தினமும் 2 லாரிகளில் சுமார் 20 டன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் வழக்கமான அளவைவிட 80 சதவீதம் வெங்காய வரத்து குறைந்துள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தொடர் மழையால் சின்ன வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அறுவடை குறைந்து, மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயத்தின் அளவும் சரிந்துள்ளது. வரத்து குறைந்ததால் அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சின்ன வெங்காயம் விலை
கடந்த வாரம் கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது இந்த வெங்காயம் விலை ரூ.180 ஆக எகிறியுள்ளது. சில்லறை கடைகளில் கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் இதன் விலை ரூ.250 வரை உள்ளது.
பெரிய வெங்காயத்தின் விலையுடன் ஒப்பிட்டாலும் சின்ன வெங்காயம் விலை கொஞ்சம் அதிகமாகவே உள்ளது... பெரிய வெங்காயம் சில்லறை மார்க்கெட்டில் கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது..
இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை மட்டுமல்லாமல் ஓட்டல்களையும் பாதித்துள்ளது. சின்ன வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தும் ஓட்டல்களில் அதன் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. வெங்காயத்தின் தோலை உரிக்கும்போதுதான் கண்ணீர் வரும். ஆனால் இப்போது விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது என்று வேதனையுடன் சொல்கிறார்கள் இல்லத்தரசிகள்.
கோயம்பேடு காய்கறிகள் விலை
சின்ன வெங்காயம் மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் அவரைக்காய் மற்றும் முருங்கைக்காய் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பீன்ஸ், நைஸ் கொத்தவரங்காய் ஆகியவை கிலோ ரூ.70க்கு விற்கப்படுகின்றன. பெரிய வெங்காயம் ரகத்தை பொறுத்து கிலோ ரூ.65 வரை விற்பனையாகிறது. உஜாலா கத்தரிக்காய், பன்னீர் பாகற்காய் ஆகியவை கிலோ ரூ.60க்கு விற்கப்படுகின்றன.
மற்ற பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தைவிட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் அன்றாட சமையல் செலவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மொத்த வியாபாரிகள் சொல்லும்போது, மழை பாதிப்பால் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. மழை பாதிப்பு இல்லாமல் இருந்தால் தை மாதத்தில் புதிய அறுவடை தொடங்கும். அதன் பிறகுதான் சின்ன வெங்காயம் விலை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.!!


Click it and Unblock the Notifications
