சினேகன் மீது போன வாரம்.. சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது இன்று வழக்குப் பதிவு..மாறி மாறி புகார்
சென்னை: சினேகன் அளித்த புகாரின்பேரில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, சினிமா பாடலாசிரியர் சினேகன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி வரும் விளம்பரம் தேடி வரும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார்.

சினேகம் பவுண்டேசன்
இந்த நிலையில் சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர் .ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

அவதூறு வழக்கு
இந்த வழக்கின் மனு கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போழுது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குபதிவு செய்து அடுத்த மாதம் 19ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணா நகர் துணை ஆணையர், மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர், திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

பண மோசடி
அந்த உத்தரவு நகலை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஜெயலட்சுமி, சினேகம் அறக்கட்டளை மூலமாக பணமோசடியில் ஈடுபட்டதாக தன் மீது பாடலாசிரியர் சினேகன் பொய்யான புகார் அளித்ததாகவும், இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து மூன்று முறை அழைத்து விசாரணை செய்து பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் தெரிவித்ததாக அவர் கூறினார்.

மன உளைச்சல்
சினேகன் எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் கொடுத்த பொய் புகார், தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் எழும்பூர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறினார். தற்போது பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தர்மம் மீண்டும் வென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

வழக்குப் பதிவு
அக்டோபர் 19ஆம் தேதிக்குள் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி சினேகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது சினேகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகை ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.