ராகுலுக்கு மகிழ்ச்சிதான்.. ஆனால் சோனியாவுக்கு பாட்டியாக முடியல என வருத்தம்.. கே.எஸ் அழகிரி ஓபன் டாக்
சென்னை: ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. இதுபோல கட்சிக்காக வாழ்வதில் நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அவரது தாயார் சோனியா காந்திக்கு வருத்தம் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகனும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்திக்கு தற்போது 53 வயது ஆகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இருக்கும் ராகுல் காந்தி இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. பாரத் ஜோடோ யாத்திரை உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வேளைகளில் ஈடுபடும் ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது தொண்டர்கள் மத்தில் அன்பு கோரிக்கைக்கள் வைப்பார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இத்தாலி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "இது சற்று வினோதமாகத்தான் உள்ளது, ஆனால் எனக்கு தெரியவில்லை. நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. குழந்தைகளை எனக்கு பிடிக்கும்" என பட்டும் படமாலும் கருத்தை தெரிவித்து விட்டு கடந்து விட்டார்.
ராகுல் காந்தி விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் ஒருபக்கம் அன்பு கோரிக்கைகள் விடுத்த வண்ணமே உள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாததில் அவரது தாயார் சோனியா காந்திக்கு வருத்தம் உள்ளதாக பேசியிருக்கிறர்.
இது தொடர்பாக கே.எஸ் அழகிரி கூறுகையில், "ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. இதுபோல கட்சிக்காக வாழ்வதில் நமக்கு மகிழ்ச்சி. ஏனெனில் அவரை வைத்துதான் வாக்குகள் வாங்குகிறோம். ராகுல் காந்தியால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வர்கள் வந்து விட்டார்கள். ராகுலுக்கும் இதில் மகிழ்ச்சிதான். ஆனால், ராகுல் காந்தியின் அம்மாவுக்கு (சோனியா காந்தி) மகிழ்ச்சி இல்லை. சோனியா காந்தி வாய் திறந்து சொல்லவில்லையே தவிர ஒரு தாயின் உள்ளம் நமக்கு தெரியும். ஒரு தாய் பாட்டியாகத்தான் விரும்புவார்" என்றார்.












Click it and Unblock the Notifications