கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்.. வெளியூர் பயணிகளுக்கு இருந்த பெரிய தலைவலி தீரப்போகுது.. சூப்பர் பிளான்
சென்னை: வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வரும் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு புதிய நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கோண்டு இருக்கிறார்கள். பயணிகளின் நீண்ட நாள் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு இருப்பதால் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து... தொலைவில் அமைந்துள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆரம்பத்தில் பல்வேறு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடைகள் இல்லை. பேருந்து நிலையத்திற்கு சென்று வர வெகு நேரம் ஆகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகள் பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
ஆனால், நாட்கள் செல்ல செல்ல கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சுட்டிக்காட்டிய பெரும்பாலான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. தற்போது அங்கு ஓட்டல்கள், நொறுக்கு தீனி கடைகள், ஏடிஎம்கள் என பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை நகருக்குள் இருந்து பயணிகள் கிளாம்பாக்கம் வந்து செல்ல ஏதுவாக புறநகர் மின்சார ரயில் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை ஆகாய நடைமேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் சிரமம் இன்றி பேருந்து நிலையத்திற்கும் ரயில் நிலையத்திற்கும் செல்ல முடியும்.
கிளாம்பாக்கம் வரை மட்டும் பேருந்துகள் இயக்கம்
எனினும், தற்போது வெளியூரில் இருந்து வரும் பயணிகள், அங்கிருந்து ஓலா, உபேர் போன்ற செயலிகள் வாயிலாக வாடகை கார்கள், ஆட்டோக்களை பிடித்து நகருக்குள் செல்கிறார்கள். இந்த பயணிகள் வாடகை வாகனங்களை புக் செய்தாலும் சாலையை கடந்து சென்று ஏறவேண்டியுள்ளது. குழந்தைகள், மற்றும் முதியவர்களுடன் வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் சிரமமின்றி ஆட்டோவில் பயணம் செய்யும் வகையில் பிரீபெய்டு ஆட்டோ, கார் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பேருந்து நிலையத்தில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்ட விரைவு பேருந்துகளும் தற்போது கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை கூடியுள்ளது.
ஓலா, உபேர் வாகனங்களை அனுமதிக்க முடிவு
ஏராளமான பயணிகள் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து ஷேர் ஆட்டோவிலும், ஓலா, உபேர் போன்ற வாடகை கார்களிலும் பயணிக்கிறார்கள். ஓலா, உபேர் வாகனங்கள் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால் பயணிகள் சிரமம் அடைந்து வந்தனர். எனவே பேருந்து நிலையத்திற்குள் உபேர், ஓலா முன்பதிவு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு ஓலா, உபேர் வாகனங்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இதற்காக இந்த வாகனங்கள் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் சுமார் 25 கார்களை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஓலா, உபேர் முன்பதிவு வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்திற்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம். விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications