கிளம்பிருச்சுப்பா.. தென்மேற்கு பருவமழை ஆரம்பம்.. இன்று முதல் தமிழகத்திற்கு 4 நாட்களுக்கு செம மழை
இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என தகவல்
சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இத்தனை நாளும் வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் ஒருவழியாக ஓய்வு பெற்றுவிட்டது.. ஆனாலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தமிழகத்தில் இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.

தென்மேற்கு பருவமழை
ஆனால், அதற்குள் கேரளாவில் தென் மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டது..
இந்தியாவில் அதிக மழைப் பொழிவை தருவது தென்மேற்கு பருவமழையாகும்.. பொதுவாக, ஜுன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்... ஆனால், இந்த முறை தென்மேற்கு பருவமழையானது 3 நாட்களுக்கு முன்பே, அதாவது மே 29-ம் தேதியே தொடங்கிவிட்டது..

பருவமழை
தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்திற்கு இயல்பான மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. 3 நாட்களுக்கு முன்னதாகவே, தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், நடப்பாண்டில் மழைப்பொழிவு என்பது இயல்பான அளவே இருக்கும் என்றும், அதன்படி, நீண்ட கால சராசரி மழையளவில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை
கடந்த வருடம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழையின் மூலம் 39.34 செ.மீ. மழை கிடைத்திருந்த நிலையில், நடப்பாண்டிலும் இயல்பான மழையே பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது... இதனால், நெல்லை தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

4 நாட்களுக்கு மழை
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் சொல்லும்போது, கேரளா மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்... நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது... குறிப்பாக, 30, 31, 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

பலத்த காற்று வீசும்
இன்றும், நாளையும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.. இந்த நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை
இதனிடையே, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது... இம்மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு சராசரியாக 100 டிகிரிக்கு மேல் பதிவாகியிருந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென மழை பெய்ததுடன், குளிர்ந்த காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications