அமைச்சர் பேசிக்கொண்டு இருக்கும் போதே.. சட்டென புகுந்த அப்பாவு.. ஒரே கேள்வி.. ஸ்டாலின் தந்த ரியாக்சன்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகர் அப்பாவுவிற்கும் - அமைச்சர் பொன்முடிக்கும் இடையில் சுவாரசியமான விவாதம் ஒன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடரே பரபரப்புடன் தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாள் ஆளுநர் ஆர். என் ரவி உரையால் சட்டசபையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் நேற்று சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது.

கல்லூரி
இந்த சட்டசபையில் பேசிய திமுக எம்எல்ஏக்கள் சிலர், தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தியாவில் இருக்கும் மாநில அரசுகளுக்கு முன்னோடி அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. ஓராண்டில் 10 கல்லூரிகளை தமிழ்நாடு அரசு கடந்த வருடம் தொடங்கி உள்ளது. இது மிகப்பெரிய சாதனை. ஒரே வருடத்தில் இந்த சாதனைகளை செய்துள்ளனர். கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் இன்னும் அரசு கல்லூரிகள் அமைக்கப்படவில்லை. மலை பகுதிகளில் நிறைய அரசு கல்லூரிகளை உருவாக்க வேண்டும். அவர்களின் காலநிலைக்கு ஏற்றபடி கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை
இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 10 கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதை எம்எல்ஏ குறிப்பிட்டார். அதே சமயம் கடந்த 20 மாதங்களில் தமிழ்நாட்டில் 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த 31 கல்லூரிகளை தொடங்கியது முதல்வர் ஸ்டாலின். அவ்வளவு வேகமாக நாம் செயல்பட்டு வருகிறோம். இந்த கல்லூரிகள் எல்லாம் செயல்பட தொடங்கிவிட்டன. மாணவர்கள் சேர்க்கைகள் அதிகரித்து உள்ளன. கல்விக்கு நாம் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்பதற்கு சான்றாக இது உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

அமைச்சர் பதில்
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு.. இப்படி எல்லாருக்கும் பண்றீங்க.. என் ஊருக்கு பண்ண மாட்டேங்குறீங்களே.. கொஞ்சம் ராதபுரத்திற்கும் அரசு கல்லூரி கொண்டு வாங்களேன் என்று சிரித்தபடி அமைச்சரிடம் கேட்டார். இதற்கு பதில் சொன்ன பொன்முடி.. கண்டிப்பாக செய்கிறோம். அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு கண்டிப்பாக கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். உங்களுடைய கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. உங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே தனியார் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி இருக்கிறோம் என்று கூறினார்.

சபாநாயகர்
அதற்கு சபாநாயகர் அப்பாவு ஒரே ஒரு கல்லூரி ராதாபுரத்திற்கு வர வேண்டும் என்றார். இதை கேட்டதும் முதல்வர் ஸ்டாலின் சிரித்தபடி ரியாக்சன் கொடுத்தார்.அதற்கு கண்டிப்பாக என்று கூறிய அமைச்சர் பொன் முடி, அரசு கலை கல்லூரிகளும், அறநிலையத்துறை சார்பாக 10 கல்லூரிகளும், கூட்டுறவுத்துறை சார்பாக 1 கலை கல்லூரியும் என்று 31 கலை கல்லூரிகளை கொண்டு வந்து இருக்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டில் தொடங்கிய ஒரே அரசு தமிழ்நாடு அரசுதான். ஏற்கனவே உருவாக்கப்பட்ட கல்லூரிகளில் இருக்கும் காலியிடங்களை நிரப்புவோம். கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அறிவிப்புகளை வெளியிடுவோம், என்று அமைச்சர் பொன் முடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications