எருமை, ஆடு.. உங்ககிட்ட நிறைய இருக்குமே! பட்டென கலாய்த்த அப்பாவு! ஸ்டன் ஆன பாஜக நயினார் நாகேந்திரன்!
சென்னை : தமிழகத்தில் கிட்டத்தட்ட சுமார் 7 கோடி கால்நடைகள் இருக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசிக் கொண்டிருக்கும் போதே, சபாநாயகர் குறுக்கிட்டு கேட்ட கேள்வியால் அவர் ஒரு சில நொடிகள் என்ன பேசுவது என தெரியாமல் திணறி நின்றார்.
தமிழக சட்டசபை மழைக்காலத் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. நேற்றைய இரண்டாம் நாளில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
மூன்றாவது நாளாக இன்று தமிழக சட்டசபை கூடிய நிலையில் அப்பாவு கேள்வி நேரத்தை அறிவித்தார் இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

சட்டசபை கூட்டம்
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்த நிலையில் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அறிமுகம் செய்து வைத்தார் தொடர்ந்து இது தொடர்பாக பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

நயினார் நாகேந்திரன்
முன்னதாக கால்நடைத் துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் கிட்டத்தட்ட சுமார் 7 கோடி கால்நடைகள் இருக்கிறது. பசு மாடுகள், எருமை மாடுகள், வெள்ளாடுகள், செம்மாறி ஆடுகள் உட்பட சுமார் 7 கோடி கால்நடைகள் இருக்கிறது எனப் பேசினார்.

சபாநாயகர் அப்பாவு
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, 'அதில் உங்களுக்கு நிறைய இருக்குமே?' என சிரித்துக் கொண்டே கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்த நிலையில், இதனை எதிர்பார்க்காத நயினார் நாகேந்திரன் ஒரு சில நொடிகள் என்ன சொல்வது என தெரியாமல் திகைத்து நின்றார். அப்போது அருகில் இருந்த பாமக எம்.எல்.ஏ. ஜிகே மணியும் சிரிக்க.. அவரும் சிரித்தே சமாளித்தார். தொடர்ந்து பேசிய நாகேந்திரன் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மாடு கேட்டேன் தரலை..
ஒரு குடும்பத்திற்கு மாடு இருந்தாலே போதும்.. முதல்வரிடம் மாடு கேட்டேன் இல்லை என்று சொல்லி விட்டார் என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் சிரிக்க , தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், பசுமாடுகள் தங்கி சிகிச்சை பெற கால்நடை மருத்துவ அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடைத்துறை அமைச்சர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications