சென்னை- இலங்கை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் மீண்டும் நாளை முதல் தொடக்கம்
சென்னை: கொரோனா பரவலின் போது நிறுத்தப்பட்டிருந்த சென்னை- இலங்கை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் நாளை முதல் மீண்டும் தொடங்குகின்றன.
இலங்கையின் வடக்கு பகுதி தமிழர்களின் தாய்நிலப் பகுதியாகும். வடபகுதி யாழ்ப்பாணத்துக்கு செல்ல கொழும்பில் இருந்துதான் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.

பலாலி விமான நிலையம்
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள்- இலங்கை ராணுவம் யுத்தம் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாணத்தின் பலாலி விமான தளத்தை இந்தியா சீரமைத்தது. இந்தியாவின் இந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2019-ல் செயல்பாட்டு வந்தது. இலங்கையின் 3-வது சர்வதேச விமான நிலையமான பலாலி அமைந்தது.

சென்னை டூ பலாலி விமான சேவை
இதனையடுத்து சென்னை- யாழ்ப்பாணம் பலாலி இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மீண்டும் விமான சேவை தொடக்கம்
இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் டிசம்பர் 12-ந் தேதி முதல் சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கும் என இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா கூறியிருந்தார். இதனையடுத்து இலங்கை விமான நிலையங்கள் ஆணைய செய்தித் தொடர்பாளர் சுமித் டி சில்வா கூறுகையில், இந்தியாவின் அலையன்ஸ் ஏர் சார்பாக வாரத்துக்கு 4 விமானங்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கான இந்திய தூதரகம்
இந்நிலையில் இலங்கைக்கான இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்திய இலங்கை மக்களிடையிலான ஆழமானதொடர்புகளுக்கு வழிசமைத்து பொருளாதாரசெழுமையினை உறுதிப்படுத்தும்வகையில் சென்னை யாழ்ப்பாணம் இடையிலான விமானசேவைகள் டிசம்பர்12 முதல் ஆரம்பம்.வாரத்தில் 4சேவைகள்!யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் இந்தியஉதவியுடன் புனரமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications