ஒற்றுமை ரொம்ப முக்கியம்! 2 மாதத்துக்கு ஒரு முறை நானே ஆய்வு செய்வேன்! அதிகாரிகளை அலறவிட்ட முதல்வர்!
அதிகாரிகள் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைந்து செயலாற்ற முதல்வர் அட்வைஸ்.
சென்னை: அதிகாரிகள் ஒற்றுமையாக துறைகளுக்கு இடையே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பாடம் எடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து திட்டங்களும் அரசின் திட்டங்கள் என்பதை மனதில் வைத்து செயல்படுமாறு மிக கறாரான முறையில் அறிவுறுத்தியிருக்கிறார்.
இதேபோல் தமிழ்நாடு அரசின் 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' (Iconic Projects) குறித்து 2 மாதங்களுக்கு ஒரு முறை தாமே ஆய்வு செய்வேன் எனக் கூறி அதிகாரிகளை அலறவிட்டுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்
தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும், மிக முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டப் பணிகள் துறை வாரியாகத் தொகுக்கப்பட்டு 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' (Iconic Projects) என ஆய்வு செய்யப்படுகின்றன. இன்று நடைபெற்ற முதலாவது ஆய்வுக் கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல், சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, பள்ளிக் கல்வி, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கால்நடை, பால் உற்பத்தி மற்றும் மீன்வளம், பொதுத் துறை மற்றும் மறுவாழ்வு, உயர்க் கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வருவாய் ஆகிய பன்னிரண்டு துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 51 திட்டங்கள் குறித்தும், 19 எதிர்கால திட்டங்கள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் அறிவுறுத்தல்
அப்போது துறைச் செயலாளர்கள் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து, விளக்கப் படங்கள் வாயிலாக எடுத்துரைத்தனர். இந்த ஆய்வின் போது, அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து, அவற்றில் சுணக்கம் ஏற்படாத வண்ணம் கண்காணித்து, அவற்றை முழுமையாகவும், விரைந்தும் முடிக்க துறைச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

செலவினத்தை அதிகப்படுத்தும்
அதோடு, புதிய திட்டங்களை அறிவிப்பதில் உள்ள ஆர்வம், அவற்றை விரைந்து நிறைவேற்றுவதிலும் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும், திட்டத்தினைச் செயல்படுத்தும்போது காலதாமதம் ஏற்படின், அது திட்டச் செலவினத்தை அதிகப்படுத்துவதோடு, பொது மக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும், திட்டங்களுக்கான வடிவமைப்பு மற்றும் ஒப்பந்தப் பணிகளை விரைவாக இறுதி செய்து, இன்னும் துவங்காத பணிகளைத் துவக்கி, அவற்றைத் துரிதமாகவும், தரமாகவும் முடித்திடவும் அனைத்துத் துறை அரசுச் செயலாளர்களையும், துறைத் தலைவர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

ஒருங்கிணைப்பு அவசியம்
அரசுத் திட்டங்களைச் செம்மையாக நிறைவேற்றிட துறைகளுக்கிடையான ஒருங்கிணைப்பு அவசியம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து திட்டங்களுமே அரசின் திட்டங்கள்தான் என்பதை மனதில் நிறுத்தி அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஆய்வு செய்யப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலாளர் அவர்களும் மாதந்தோறும் இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications