“தமிழே நீ வாழ்ந்திடு”.. உலகத் தாய்மொழிகள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
சென்னை: உலக தாய்மொழிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். "ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் "தமிழே" என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது." என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாய்மொழியின் சிறப்பைப் போற்றும் வகையிலும், தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழின் சுவையைச் சொல்லும் கலைஞர் கருணாநிதியின் கவிதை வரிகளால் உருவாக்கப்பட்ட பாடலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், "தமிழே நீ வாழ்ந்திடு! இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் "தமிழே" என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது.
தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி! நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி. அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ். அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம். மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சுவை சொட்டும் பாவேந்தர் பாரதிதாசனின் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப நம் உயிர்மூச்சுக்கு இணையான தாய்மொழியாம் தமிழ் மொழியைப் போற்றி கொண்டாடிடும் உலக தாய்மொழிகள் தினம் இன்று.
ஏனைய மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக, தமிழ் இனத்தின் நாகரீகமாக, ஏராளமான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் உள்ளடக்கிய உலகின் தொன்மையான மொழியாகப் போற்றப்படும் நம் தமிழ் மொழியைப் பேணிக் காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications