அமெரிக்கா பறக்கும் ஸ்டாலின்? து.முதல்வராகும் உதயநிதி! வெற்றிக்கனிக்காகக் காத்திருக்கும் திமுக !
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு வெளியான உடனே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அமர்த்தப்படுவார் என அறிவாலய வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்து வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடக்கிறது. நேற்று இறுதிக்கட்ட பரப்புரைக்கான கடைசி நாள் என்பதால், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்னியூர் சிவாவுக்காகப் பிரச்சாரம் செய்தார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. திமுகவை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்பதால் அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளது.

இந்தக் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அப்படி இருந்தும் தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து பாமகவும் நாதகவும் களத்தில் உள்ளன. பாஜக கூட்டணியில் உள்ள பாமக நிற்கிறது. அடுத்து நாம் தமிழர் கட்சியும் போட்டிப் போடுகிறது. விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் பாமக ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் போட்டு வாக்கு கேட்டு வந்த விவகாரம் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரிதாக விமர்சிக்கவில்லை. ஆனால், அன்புமணி ராமதாஸ் தங்கள் கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் இருப்பதால் ஜெயலலிதா புகைப்படம் பயன்படுத்தப்பட்டது என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில்தான் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டி விக்கிரவாண்டி வந்திருந்த உதயநிதி ஸ்டாலின், "பிரதான எதிர்க்கட்சி அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை. எதனால் போட்டியிடவில்லை, தோல்வி பயம். கடந்த பல தேர்தலில் திமுகவுக்கு தொடர்ந்து வெற்றியை வாக்காளர்களாகிய நீங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அதிமுகவுக்கு தொடர் தோல்வியை தந்து கொண்டே இருக்கிறீர்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வழி விட்டுவிட்டு, அதிமுக ஒதுங்கிக் கொண்டுள்ளது.
முதல்வர் பால் விலையை குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்ததும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் மாணவிகள் மாதம் 1000 ரூபாய் உயர்கல்வி படிப்பதற்காக உதவித் தொகையாகப் பெற்று வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 66 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள்" என்று பேசி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
சீமான், கடந்த 10 நாட்களாகப் பாண்டிச்சேரியில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, விக்கிரவாண்டியில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது கட்சிக்கு எப்படியாவது 8 ஆயிரம் வாக்குகள் மேல் பெற்றுத் தரவேண்டும் என்பது அவரது திட்டமாக உள்ளது. அதாவது 2வது இடத்தை குறிவைத்து வேலை செய்து முடித்துள்ளார். அதேபோலத்தான் பாமக. அங்கே பாமக பெரிய நிர்வாகிகள் பலர் தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளிலிருந்து வந்து தேர்தல் பணி செய்து வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, அவரது மகள்கள் என ஒட்டுமொத்த குடும்பமும் அங்கேதான் உள்ளது.
எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பதற்காகக் கிட்டத்தட்ட 10 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் மசெக்கள் பலர் உள்ளனர். முழுப் பொறுப்பும் உதயநிதி கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆகவே, இறுதிவரை முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்குச் செல்லவில்லை. ஏனென்றால், கள்ளச்சாராய விசயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அங்கே முதல்வரைத் தாக்கி பேசக் கூடும். அது திமுக வேட்பாளருக்கு எதிராகப் போய் முடியக் கூடும் என்று திமுக தலைமை நம்புகிறது. ஆகவே, முதல்வர் பிரச்சாரத்திற்குப் போகவே இல்லை.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவையில் மாற்றம் வரும் என்ற பேச்சுகள் கிளம்பின. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவே இல்லை. கூடவே உதயநிதி து.முதல்வராகப் பதவியேற்பார் என்றும் சொல்லப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. கடந்த ஆண்டு இளைஞரணி மாநாடு தொடங்கியது முதல் உதயநிதி தனக்கு து.முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் காத்துக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் முதல்வரின் மூவ் என்ன என்று வெளிப்படையாகத் தலைமைக்கே தெரியவில்லை என்கிறார்கள். ஏனென்றால், இடையில் கள்ளக்குறிச்சி சாராய சாவுகள் நடந்துள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றமோ, உதயநிதிக்குக் கூடுதல் பதவியோ கொடுத்தால் அது திமுகவுக்கு சில எதிர்விளைவுகளைத் தரலாம். எனவே ஒரு வெற்றியான தருணத்தில் து.முதல்வர் பதவியை உதய்க்கு தரலாம் என்று முதல்வர் யோசிப்பதாகவும் மற்றொரு தரப்பு தகவல் தருகிறது.
விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது. அப்போது அவருக்குப் பதிலாக அதிகாரப்பூர்வமாக முடிவுகளை எடுக்க ஒருவர் தேவை. ஆகவே, அந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டு உதயநிதியைத் துணை முதல்வராக்கிவிடலாம் என ஸ்டாலின் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. எப்படிப் பார்த்தாலும் விக்கிரவாண்டி வெற்றிக்குப் பிறகு உதயநிதி து.முதல்வராகப் பதவி உயர்வு பெறுவது உறுதி என்கிறது அறிவாலய வட்டாரம்.












Click it and Unblock the Notifications