திருவண்ணாமலை அருகே விபத்தில் 8 பேர் பலி! குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்த அரசு!
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழகத்தில் கோர விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது தொடர் கதையாக உள்ளது. அண்மையில் தான் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிந்து 9 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு நடந்தது. இப்போது என்னவென்றால் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் நிகழ்விடத்திலேயே 8 பேர் உயிரிழந்த துயர நிகழ்ந்து நடந்துள்ளது. தமிழகம் தழுவிய அளவில் இந்த விபத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அரசும், போக்குவரத்துக் காவலர்களும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் கூட விபத்துக்கள் குறைந்தபாடில்லை. சாலை விபத்து ஒரு பக்கம் என்றால் பட்டாசு வெடி விபத்து மற்றொரு பக்கம். அண்மையில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி பல உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இதனிடையே இன்றைய தினம் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் காந்தி நகர் பகுதி, திருவண்ணாமலை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று (15-10-2023) காலை காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். ''
''இவ்விபத்தில் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.'' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications