தமிழகத்தில் படுதோல்வி.. இருந்தும் பாடம் கற்காத அரசுகள்.. 8 வழிச்சாலை விவகாரத்தில் ஸ்டாலின் அறிக்கை
சென்னை: சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பை எதிர்த்து அரசுகள் மேல்முறையீடு செய்யாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்திருந்ததை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு தற்போது இவ்விகாரத்தில் மேல்முறையீடு செய்திருப்பது, தமிழக மக்களுக்கு செய்யப்படும் மன்னிக்க முடியாத துரோகம் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற மறுநாளே மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக துவங்கியுள்ளதாக ஸ்டாலின் சாடியுள்ளார். அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்று சொன்ன மோடி அரசின் செயல்பாடு அதிர்ச்சி அடைய வைக்கிறது.
சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த நேரத்தில், வாக்காளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என வாக்குறுதி தந்தார். இந்த வாக்குறுதியை முன்னிறுத்தி வாக்கும் கேட்டார்.
ஆனால் முதலமைச்சரையும் மேடையில் வைத்துக்கொண்டு, சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த நிதின் கட்கரி பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், முதலமைச்சர் அமைதி காத்தார். அவரது கூட்டணிக் கட்சித் தலைவரான ராமதாஸ் அவர்களும் மவுனமாகவே மேடையில் இருந்தார்.
தற்போது தேர்தல் முடிந்து தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி வரலாறு காணாத தோல்வியடைந்த பிறகு, குறிப்பாக முதலமைச்சரின் மாவட்டத்திலேயே தோற்ற பிறகு 8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்.
தமிழகத்தில் ஒரு மக்களவை தொகுதியில் கூட தங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்ற கோபத்திலும், எரிச்சலிலும் மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்ற அடுத்த நாளே தமிழகத்தில் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் படுதோல்வியை பரிசாக மக்கள் கொடுத்தும் இரு அரசுகளும் அதிலிருந்து இன்னும் பாடம் கற்கவில்லை.
தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படுவதையும், தமிழக மக்களை வஞ்சித்து பழி வாங்க துடிப்பதையும் கைவிடவில்லை. தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் மத்திய அரசு விபரீத விளையாட்டு நடத்தாமல், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை, அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை அமைச்சர் பதவி கிடைக்க வண்டும் என்பதற்காக வேடிக்கை பார்க்கப் போகிறாரா. அல்லது கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுப்பாரா என பாதிக்கப்படும் மக்கள் கேள்வி கேட்பதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications