இலங்கை கடற்படை பிடியில் தமிழக மீனவர்கள்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம்!
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், 13.01.2024 அன்று நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரத்தை இலங்கை அரசுடன் உரிய தூதரக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று, இலங்கை சிறையில் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் அதிகாரம் தமிழக மீனவர்களுக்கு உண்டு. என்றும் அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வதை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ள நிலையில் முதல்வரும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். மேலும், வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் எந்த நெருக்கடியும், அச்சுறுத்தலும் இல்லாமல் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டிருந்தார்.
தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன் பிடித்து வரும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்திருப்பது கண்டிக்கத்தக்கது என கடும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பிய நிலையில் முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications