ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்.. ஹின்ட் கொடுத்த உதயநிதி.. காங்கிரஸ் கட்சிக்கு “செக்”.. 2026 கேமே வேற!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தலை நோக்கி வியூகங்களை அமைத்து வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள். காங்கிரஸ் கட்சியும் கூட்டணி தொடர்பாக திட்டங்களை தீட்டி வரும் நிலையில், அக்கட்சிக்கு அதிரடியாக செக் வைத்திருக்கிறார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வலுவான கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி பல்வேறு தேர்தல்களில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

mk stalin dmk congress

கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் 40க்கு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பெரும்பான்மை இடங்களில் வென்றது. அண்மையில் நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 40க்கு 40க்கு என்ற அமோக வெற்றியை பெற்றது.

திமுக திட்டம்: இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், காங்கிரஸ் கட்சி திமுக தயவில் நிற்கக்கூடாது, நம் பலத்தைக் காட்ட வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த கருத்துகள் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் திமுக 2026 சட்டசபை தேர்தலை தனித்தே நின்று களம் காணவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதாக கூறப்படும் நிலையில், ஓரளவுக்கு மேல் சீட் கொடுக்க முடியாது, சீட் பகிர்வால் கூட்டணி கட்சிகளுடன் இணக்கம் ஏற்படவில்லை என்றால் தனித்து நிற்கவும் தயாராக வேண்டும் என திமுக தலைமை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்போதே ஆரம்பித்த ஸ்டாலின்: அதன் அடிப்படையில் தான் இப்போதே அதாவது சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் இருக்கும் சூழலிலேயே, சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளாராம் ஸ்டாலின். கூட்டணியே தேவையில்லை, தனித்து நின்றே வெல்லலாம் என்ற அளவுக்கு களத்தை சாதகமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 5 பேரை கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஸ்டாலினிடம் இருந்து பறந்திருக்கும் உத்தரவாம்.

அதைத்தொடர்ந்து, 234 தொகுதி திமுக பார்வையாளர்களையும் குறிஞ்சி இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்து சிறப்பாக கவனித்து அனுப்பியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 2026 தேர்தலில் நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு எனர்ஜி கொடுத்துள்ள உதயநிதி, தேவைப்பட்டால் கூட்டணியின்றி தனியாக போட்டியிடவும் நேரிடும் என்று சூசகமாக கூறியதாகவும் கூறப்படுகிறது.

2026 சட்டசபை தேர்தலில் சீட் பகிர்வின்போது கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என்று சில கட்சிகள் ஆட்டம் காட்டினால் அசைந்து கொடுக்கத் தேவையில்லை, திமுகவே அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் தலைவர் ஸ்டாலின், அதற்கான வேலைகளை உற்சாகமாக பாருங்கள், என்பதை சூசகமாக உணர்த்தி இருக்கிறாராம் உதயநிதி.

காங்கிரஸ் கட்சிக்கு செக்: ஆக, முதல்வரின் திட்டம் இதுதான் என்கிறார்கள். ஸ்டாலினின் இந்த எண்ண ஓட்டத்துக்கு கட்டியம் கூறும் ஒரு நிகழ்வும் அரங்கேறி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக இருந்து வந்த நிலையில், 3 ஆண்டு பதவி காலம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், அவரது பதவிகாலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக, கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த ஜோ அருண் நியமிக்கப்பட்டார். பீட்டர் அல்போன்ஸுக்கு பதவி நீட்டிப்பு செய்யாமல் அதே சமயம், வேறு காங்கிரஸ் நபருக்கும் பதவியை வழங்காமல் திருச்சபையை சேர்ந்த ஒருவருக்கு வழங்கி இருக்கிறார் ஸ்டாலின்.

ஆட்டம் எங்க கையில்: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் சமீப கால பேச்சுகள், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக சீட் கேட்டு நெருக்கும் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்று தான். அதற்குத்தான், கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டியது திமுக தான் என சொல்லாமல் சொல்லும் வகையில் இந்த நியமனம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

mk stalin dmk congress

காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுகள்: அண்மையில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசுகையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டு இவ்வளவு நாளாகியும் ஒருவர் கூட கைதாகவில்லை. திருமாவளவனுக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? நாமும் நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும். நாம் கூட்டணியை மதிக்கிறோம். ஆனால் நாம் பொதுப்பிரச்சினைகளில் பேச தயக்கம் காட்டுகிறோம். இனி தயக்கம் காட்ட கூடாது எனப் பேசி இருந்தார்.

அமைச்சரவையில் இடம்: மேலும், அரசியலில் ஆளுங்கட்சி ஒன்று இருக்கிறது. எதிர்க்கட்சி ஒன்று இருக்கிறது. இப்படி இரண்டு பக்கமும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. 2029க்கு முன்பாக 2026 தேர்தல் இருக்கிறது. தமிழக அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் எனப் பேசினார்.

முன்னதாக, சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் தோழமை என்பது வேறு, சார்ந்திருத்தல் என்பது வேறு. எத்தனை நாட்களுக்கு நாம் சார்ந்திருக்கப் போகிறோம்?" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+