தூக்கப்படும் சீனியர்கள்? துண்டாகும் மாவட்டங்கள்? ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்கெட்ச்! 78 டூ 100 திமுக பிளான்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் இப்போது செம பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது. தேர்தல் கள நிலவரங்கள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக திமுக தலைமை நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டம், கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பு வரை மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்க தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம். நாளைய தினம் மிக முக்கிய சம்பவம் ஒன்று நடக்க போகிறது.. அது என்ன தெரியுமா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட மிக முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். கட்சியின் எதிர்காலப் போக்கை மாற்றியமைக்கக்கூடிய மிக முக்கியமான முடிவுகள் இந்த மூடிய அறை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் கசியவிட்டுள்ளன.

சமீபத்தில் அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தங்களது ரகசிய அறிக்கையை கட்சித் தலைமையிடம் நாளை சமர்ப்பிக்க போகிறது.. அந்த அறிக்கையின் அடிப்படையில், கட்சி ரீதியாக மிக பிரம்மாண்டமான மற்றும் அதிரடியான மாற்றங்களைச் செய்ய ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
துண்டாகும் மாவட்டங்கள்?
இந்த அதிரடி மாற்றத்தின் முதல் கட்டமாக, திமுகவின் அதிகார மையங்களாக விளங்கும் மாவட்ட செயலாளர்களின் பதவிகளில் கை வைக்க கட்சித் தலைமை துணிந்துவிட்டது என்றே தோன்றுகிறது..
ஏனென்றால் திமுகவில் மொத்தம் 78 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரின் கட்டுப்பாட்டில் குறைந்தபட்சம் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 6 சட்டப்பேரவை தொகுதிகள் வரை உள்ளன. இவ்வளவு பெரிய பரப்பளவை ஒரே நபர் கவனிப்பதால், கட்சிப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன.
தூக்கப்படும் சீனியர்கள்?
இவைகளை சரிசெய்யும் பொருட்டு, மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 78 என்ற எண்ணிக்கையிலிருந்து 100-க்கும் மேல் அதிரடியாக உயர்த்த திமுக அதிரடி மாஸ்டர் பிளான் ஒன்றை தயார் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி, மாவட்டங்கள் மேலும் பல துண்டுகளாக பிரிக்கப்படும் பட்சத்தில், ஒரு மாவட்ட செயலாளரின் கீழ் குறைந்தபட்சம் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 4 தொகுதிகள் மட்டுமே வரும். இதன் மூலம் தொகுதி பணிகளை மிகத் துல்லியமாகவும், தீவிரமாகவும் கவனிக்க முடியும் என்று தலைமை நம்புகிறது. இந்த எல்லை மறுவரையறை பணிகள் எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த ஒட்டுமொத்த மாற்றத்தில் தொண்டர்களை மிகவும் உற்சாகப்படுத்தியிருப்பது என்ன தெரியுமா? புதிய மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு யாரை நியமிக்கப் போகிறார்கள் என்பதுதான்..
ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்கெட்ச்
பல ஆண்டுகளாகவே எந்தவிதமான அங்கீகாரமும் எதிர்பாராமல், கட்சிக்காக உழைத்து தேய்ந்த மூத்த மற்றும் விசுவாசமான நிர்வாகிகளுக்கு இந்த முறை முன்னுரிமை தர ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியுள்ளாராம். அதேசமயம், மக்கள் மத்தியிலும் கட்சிக்குள்ளும் பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி, தலைமைக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும் தற்போதைய மாவட்ட செயலாளர்களைக் கட்டம்கட்டி தூக்குவதற்கும் பட்டியல் தயாராகிவிட்டதாம்.
குறிப்பாக இந்த புதிய லிஸ்ட்டில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் முக்கியப் பொறுப்புகளை வாரி வழங்க தலைமை உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
சீனியர்களின் ஆதிக்கத்தை குறைத்து, புது ரத்தத்தை பாய்ச்சும் இந்த அதிரடி நடவடிக்கையால், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று திமுகவின் இளம் தலைமுறையினர் ஆவலோடு காத்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம், தங்களின் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் மாசெக்கள் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளனராம்.
ஆக மொத்தம் விரைவில் வெளியாக போகும் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, திமுகவின் உட்கட்சி அரசியலில் ஒரு புயலை கிளப்பப் போகிறது என்று மட்டும் தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications