நிலைகுலைந்த ஸ்டாலின்.. மண்ணை கவ்விய எடப்பாடி பழனிசாமி.. இனி ஆட்சி இவர்கள் தானா?”
சென்னை: தமிழக அரசியலின் பல வருட கணக்குகளை மொத்தமாகப் புரட்டிப் போட்டுள்ளது இந்த 17-வது சட்டசபை தேர்தல் முடிவுகள். கோட்டையை ஆளுபவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதில் மக்கள் காட்டியுள்ள வேகம், பாரம்பரியக் கட்சிகளையே நிலைகுலைய வைத்துள்ளது... எங்கு பார்த்தாலும் எதிர்பாராத தோல்விகளும், புதிய சக்திகளின் எழுச்சியுமாக தமிழகம் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது.
தமிழக அரசியல் களம் இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட தீர்ப்பை இந்த முறை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். 17-வது சட்டசபை தேர்தல் முடிவுகள், பலமான அடித்தளம் கொண்ட கட்சிகளையே ஆட்டம் காண வைத்துவிட்டது.

ஓரம் கட்டப்பட்ட திராவிட கட்சிகள்
சொல்லப்போனால், காலம் காலமாக கோட்டையைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட திராவிடக் கட்சிகளின் கணக்குகளை, முதல் தேர்தலிலேயே ஓரங்கட்டியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். எதுக்கு மக்கள் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்று அரசியல் விமர்சகர்களுக்கே புரியவில்லை, அந்த அளவுக்கு ஒவ்வொரு தொகுதியின் முடிவுகளும் திகைக்க வைக்கின்றன.
ஆளும் தரப்பிற்கு இந்தத் தேர்தல் ஒரு கசப்பான அனுபவம். ஆட்சியில் இருந்தும் திமுக 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அந்த கட்சி தலைமைக்கே எதிர்பாராத ஷாக் தான்.. அதிலும் ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியிலேயே பின்னடைவைச் சந்தித்ததுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி.
அண்ணா அறிவாலயம்
முடிவுகள் வெளியான போது, வழக்கமாகப் பரபரப்பாக இருக்கும் அண்ணா அறிவாலயம் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. முதலமைச்சராக இருந்தவர் தன் சொந்த மண்ணிலேயே வீழ்ந்தது, உடன்பிறப்புகளை நிலைகுலையச் செய்துள்ளது...
அதிமுக முகாமில், இதற்கு மேல் ஒரு விசித்திரமான சூழல் நிலவுகிறது.. எடப்பாடி பழனிசாமி மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தனது பலத்தை நிரூபித்துள்ளார். ஆனால், தனி மரம் தோப்பாக முடியாது என்பது போல, அதிமுக ஒட்டுமொத்தமாக 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
"தலைவர் ஜெயிச்சாச்சு, ஆனா கட்சி இப்படி ஆகிடுச்சே" என ரத்தத்தின் ரத்தங்கள் ஒருவித குழப்பத்திலேயே உள்ளனர். இந்த முடிவு அதிமுகவின் எதிர்காலம் குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.
கட்சிகளுக்கு இந்த வார்னிங்?
நடிகர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே மற்ற ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது சாதாரண விஷயமல்ல. ஆனால், ஜெயித்தாலும் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் விஜய் முதலமைச்சராக முடிசூடுவதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.
அதேநேரம், நாம் தமிழர் கட்சியின் நிலைமை இன்னும் மோசம். சீமான் களம் கண்ட காரைக்குடியில் அவர் டெபாசிட் இழந்திருப்பது, தம்பிகளிடையே இருந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. தமிழக அரசியலில் இனி "ஒற்றை ஆட்சி" என்பது கனவுதானோ என்கிற அளவுக்கு ஒரு சூழல் உருவாகியுள்ளது.
முதிர்ச்சியான ஜனநாயகம்?
தமிழக வாக்காளர்கள் இந்த முறை மிகவும் நிதானமாக விளையாடியிருக்கிறார்கள். எந்த ஒரு கட்சிக்கும் முழுமையான அதிகாரத்தை கொடுக்காமல், "யாராக இருந்தாலும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்க வேண்டும்" என்கிற நெருக்கடியை உருவாக்கியிருப்பது ஒரு முதிர்ச்சியான ஜனநாயகத்தின் வெளிப்பாடா அல்லது குழப்பமா என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால், மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது.
பழைய பாணி அரசியலும், வாரிசுப் பேச்சுகளும் இனி எடுபடாது என்பதை மக்கள் ஓட்டு மூலமாக நெத்தியடியாக சொல்லியிருக்கிறார்கள். முக்கியத் தலைவர்கள் தங்கள் சொந்தத் தொகுதியிலேயே மண்ணைக் கவ்வியிருப்பது, மக்கள் வேலையை மட்டுமே பார்ப்பார்கள்.. இனி வரும் நாட்களில் கூட்டணி பேச்சுகளும், திரைமறைவு அரசியல் நகர்வுகளும் தலைதூக்கும்.
எப்படியோ, இந்த இழுபறி நிலை மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதே நம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications