ஸ்டெர்லைட் ஆலை சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது - கனிமொழி
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது. மக்களின்கருத்தை கேட்ட அரசு, அதனை நீதிமன்றத்தில் அழுத்தமாக எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தை கேட்ட அரசு, அதனை நீதிமன்றத்தில் அழுத்தமாக எடுத்து வைக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி போராடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேதாந்தா நிறுவனம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தமிழக அரசோ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் சாக்காக கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனைவருக்கும் இலவசமாக கொடுக்க தயாராக இருக்கிறோம். தயவு செய்து ஆலையை திறக்க அனுமதி கொடுங்கள் என ஸ்டெர்லைட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

தமிழக அரசு மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் யோசனை
இதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது தவறு சரியா? என கேள்வி எழுப்பியதோடு ஆலையை அரசே ஏற்று நடத்தலாம் என்றும் எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல, மக்களின் உயிர் தான் முக்கியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை
இதற்கு தமிழக அரசு தரப்பில், கடந்த 2018ஆம் ஆண்டு நடந்ததை போல மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்க விரும்பவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் சம்பவம் நடந்தாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்னமும் தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

திமுக எம்.பி கனிமொழி
இதையடுத்து, ஆலையை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஏன் அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசு உரிய பதிலளிக்க வேண்டுமென திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

அழுத்தமாக சொல்லுங்கள்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏன் செயல்படுத்தக்கூடாது என்று கேட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது. மக்களின் கருத்தை கேட்ட அரசு, அதனை நீதிமன்றத்தில் அழுத்தமாக எடுத்து வைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications