துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. உஷார்! எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
சென்னை: இன்று மாமல்லபுரத்தில் மாண்டஸ் சூறாவளி புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 5-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி கடுமையான சூறாவளியாக மெல்ல நகர்ந்து வரும் மாண்டஸ், இன்று வலுவிழந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே சூறாவளியாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
கரையை கடக்கும் நேரத்தில் இந்த பகுதிகளில் சுமார் 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
மாண்டஸ் புயல்- சென்னையில் விடிய விடிய மழை- மாமல்லபுரத்தில் 10 அடி உயரத்தில் சீறும் கடல் அலைகள்

அடுத்த மூன்று மணி நேரத்தில்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று மாண்டஸ் புயலாக உருவாகியுள்ள நிலையில் இந்த புயல் கடுமையான சூறாவளியாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. தற்போது இது மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு மறும் வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. காலை 7 மணி நிலவரப்படி அடுத்த மூன்று மணி நேரத்தை பொறுத்த அளவில் பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், மாதாவரம், மதுராந்தகம், வாலாஜாபாத், குன்றத்தூர், பூவிருந்தவல்லி, ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், தாம்பரம், திருவள்ளூர், திருவொற்றியூர், ஊத்துக்கோட்டை, பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், திருப்போரூர், வண்டலூர் என உள் மற்றும் கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

விளக்கம்
அதேபோல, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களிலும் நாகை, கடலூர், காரைக்கால் துறைமுகங்களிலும் 5-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது இந்த 5ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைமுகத்திற்கு இடது பக்கத்தில் புயல் கரையை கடக்கும் என்று அர்த்தம். இவ்வாறு புயல் கரையை கடக்கும்போது துறை முகத்தை ஒட்டியுள்ள பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்படலாம். எனவே முன்னெச்சரிக்கையாக மீன்வர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்னரே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. மேலும், கடலில் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
இதர முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பொறுத்த அளவில் 28 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த அளவில் விழும் நிலையில் இருக்கும் மரங்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளன. மேலும் மரங்கள் ஏதேனும் விழும எனில் அதனை உடனடியாக அகற்ற 272 மர அறுவை இயந்திரங்களும், 6 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரமும் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 45 ஜே.சி.பி வாகனங்கள் மற்றும் 115 டிப்பர் லாரிகளும் இந்த மரங்களை அகற்ற தயார் நிலையில் இருக்கிறது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் மழை?
மழையை பொறுத்த அளவில் தற்போது வட கடலோர மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனையடுத்து புயல் கரையை கடந்த பின்னர் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சூறாவளி புயலாக சொல்லப்பட்டாலும் இதற்கு முன்னர் வந்த கஜா, வர்தா உள்ளிட்ட புயலை போல பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.