720க்கு 94 மார்க்.. ஆனாலும் சீட்.. இதுதான் நீட் தரும் தரமா? அண்ணாமலைக்கு ராஜீவ் காந்தி சுளீர் கேள்வி
சென்னை: நீட் தேர்வு தகுதியான மாணவர்களை உருவாக்கும் என பாஜக தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் நிலையில், இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் ராஜீவ் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளின்படி தமிழ்நாட்டு மாணவர்கள் சுமார் 51.20% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
ஆனாலும் இதில் பலரும் தங்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் இது குறித்து திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது.

நீட்
தரமான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்த தேர்வு தகுதியான மாணவர்களை உருவாக்கும் என்றும், தகுதி உள்ளவர்களுக்கே வாய்ப்பு என்கிற அடிப்படையில் இத்தேர்வு செயல்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. பாஜக தலைவர்களும் இதையே கூறி வருகின்றனர். கடந்த செப்டம்பரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நீட் விலக்கு கோருவது சரியல்ல. நீட் தேவை. தமிழ்நாடு அரசு அனுப்பிய தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திரும்ப அனுப்பதான் போகிறார்" என்று கூறியிருந்தார்.

மெடிக்கல் சீட்
மறுபுறத்தில் நீட் தேர்வில் வெற்றியடைந்தாலும், மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கவில்லையென மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 3,350 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. ஆனால் மாநிலம் முழுவதும் இருந்து 1.32 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இதில் தேர்ச்சியடைந்தது 51.20% பேர். அதாவது 66 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் பயில தகுதி உடையவர்களாவார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறதா? என கல்வியாளர்கள் பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும், "இந்த தேர்வில் 4,600 பேர் 95%க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருக்கிறார். குறைந்தபட்சம் இவர்கள் அனைவருக்குமாவது சீட் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கு அரசிடம் பதில் இல்லை. ஏனெனில் மொத்தம் இருப்பது 3,350 சீட்கள் மட்டுமே" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தகுதி
தமிழ்நாட்டின் நிலைமை இவ்வாறு எனில் இந்தியா முழுவதும் 60 ஆயிரம் மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். எனவே பலர் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில்கின்றனர். இவற்றையெல்லாம் கல்வியாளர்கள் மற்றும் திமுகவினர் சுட்டிக்காட்டி நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர். "நீட் தேர்வு மட்டுமே தகுதியான மாணவர்களை உருவாக்கிவிடாது" என்று சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

கேள்வி
அதாவது நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 'மேனேஜ்மென்ட் கோட்டாவில்' மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்களை டிவிட்டரில் பகிர்ந்து, "Just pass மார்க்கும் பல கோடி ரூபாய் பணமும் இருந்தால் போதும் யாரு வேண்டுமென்றாலும் மருத்துவம் படிக்கலாம். நீட் வந்தால் தகுதியானவர்கள் மட்டும் தான் மருத்துவம் படிக்க முடியும் என பேசிய அண்ணாமலை இதற்கு என்ன பதில் சொல்வார்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். தற்போது இந்த ட்வீட் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications