மாணவர்களே ஜாலியா பள்ளிக்கு போகலாம்...நவ.15 வரை பாடம் கிடையாது - ஆடல், பாடல், கதைதான்
பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 15ஆம் தேதி வரைக்கும் பாடங்கள் நடத்தப்படாது எனவும் கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நவம்பர் 1ம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை அளிக்க வேண்டும் எனவும் கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1-8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. முதல் அலை இரண்டாம் அலை என பரவிய கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான்.
படிப்படியாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. 9 முதல் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை கருத்தில் கொண்டு புத்தாக்க பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து மாவட்டங்களில் பள்ளி வளாகம், வகுப்பறை போன்றவைகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல மாத இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு வருகை தருவதால் அவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்யவும், கற்றலில் ஆர்வத்தை தூண்டவும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆடல், பாடல், கதை
அதன் படி முதல் 10-15 நாள்களுக்கு கதை, பாடல், விளையாட்டு , வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிர்வு, கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலை பின்பற்றி மன மகிழ்ச்சி மற்றும் புத்தாக்க செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்று தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

50 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
மேலும் 1 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பள்ளிக்கு வருகை தரவுள்ளதால் மனமகிழ்ச்சி வழிகாட்டுதலை பின்பற்றி குழந்தைகளின் மனவெழுச்சியை ஆற்றுப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் . இதனை முடித்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடங்களை நடத்த வேண்டும். 2 முதல் 5 ம் வகுப்பு வரை 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை செய்ய வேண்டும், பிறகு 50 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சி கூட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மகிழ்ச்சியான மனநிலை
மாணவர்களின் கற்றல் அடைவுக்கு ஏற்ப கால அளவை நீட்டித்து பாடத்திட்டத்தை செயல்படுத்தலாம். பள்ளி திறப்பதற்கு முன்பே இச்செய்திகள் அனைத்து ஆசிரியர்களை சென்றடைந்து அவர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்துதல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications