கொளத்தூருக்கு வரும் போது மட்டும் அப்படியொரு மகிழ்ச்சி! சொந்த தொகுதி மக்கள் மத்தியில் ஸ்டாலின் பேச்சு
சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது மட்டும் எந்தப் பூரிப்போடு, எந்தப் பெருமையோடு, எந்த மகிழ்ச்சியோடு நான் வருவேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும் என சொந்த தொகுதி மக்கள் மத்தியில் பேசியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பேசியதாவது;

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் நேரத்தில் அறிவித்திருக்கக்கூடிய திட்டங்கள், அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எத்தனையோ திட்டங்களை இங்கே தொகுத்து தொடக்கத்திலே வரவேற்புரை ஆற்றிய அருமை சகோதரி அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், சாதனைகளை சொன்னால், நேரம் போதாது என்று சொன்னார். உண்மைதான். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சிதான். அதற்காகத்தான் சொல்லுகிறோம், இது ஒரு திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு எத்தனையோ நற்சான்றிதழ்கள் ஊடகங்களாக இருந்தாலும் பத்திரிகைகளாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து வரக்கூடிய ஆங்கிலப் பத்திரிகைகளாக இருந்தாலும், நம்முடைய ஆட்சியை இன்றைக்குப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள், வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

"ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள், என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று என்னை நிருபர்கள் கேட்டபோது நான் குறிப்பிட்டுச் சொன்னேன். மகிழ்ச்சி அடைகிறேன், வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன். அதோடு நிறுத்தவில்லை, வாக்களித்தவர்கள் பெருமைப்படத்தக்க வகையில் ஆட்சியை நடத்துவது மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்காமல் நாம் இருந்துவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.
அதைத்தான் திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இன்றைக்கு நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிலேயே நம்பர் ஒன் சி.எம்., என்று அந்தப் பாராட்டை நான் பெற்றிருந்தாலும் அப்போதும் நான் சொன்னேன், நம்பர் ஒன் சி.எம்., என்று சொல்வதைவிட 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை உருவாக வேண்டும் என்று நான் சொன்னேன், அது வந்திருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications