சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியை மாற்ற கொலிஜியம் பரிந்துரை.. அடுத்த பொறுப்பு நீதிபதி யார்?
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்த நிலையில் மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை.
மத்திய அரசு இன்னும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியை நியமிக்க ஒப்புதல் தராத நிலையில், பொறுப்பு நீதிபதி மாற்றப்பட்டால், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சென்னை ஐகோர்ட்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதியுடன் அவரும் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா செப்டம்பர் 22ஆம் தேதி பொறுப்பேற்றார்.

கொலிஜியம் பரிந்துரை
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்தது.

மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி
ஆனால், இன்னும் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்த முரளிதர் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டால், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியாக வேறொருவரை நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

குஜராத், தெலுங்கானா
மேலும், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் ரெட்டி மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் காரியெல் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. விரைவில் இருவரும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications