தமிழக காங்கிரஸ் நற்பெயருக்கு களங்கம்! சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகி மீது ஒழுங்கு நடவடிக்கை!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து சையத் இப்ராஹீம் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷா அறிவித்துள்ளார்.
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கும் அஸ்லம் பாஷா பரிந்துரை செய்துள்ளார். இதன் மூலம் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டிப்பூசலே இல்லாத சார்பு அணி கிடையாது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏற்கனவே தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை பிரிவில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், ரஞ்சன்குமாருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது. அதே போல் மகிளா காங்கிரஸ் பற்றி சொல்லவே வேண்டாம். அந்தளவுக்கு அங்கு பல கோஷ்டிகள் பிரிந்து கிடக்கின்றன.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷா விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''தமிழக காங்கிரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சையத் இப்ராகிம் அவர் வகிக்கும் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications