ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி.. சூடுபிடித்த தேர்தல் களம்!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதற்கான பணிகள் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு தொகுதி வாக்காளர் வாக்களிக்க வசதியாக பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளில், ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 60 வார்டுகளில் 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியை உள்ளடக்கியதாகவும் வார்டு வாரியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அலுவலர்கள் அவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை பரிசோதனை செய்த பிறகு அதன் அடிப்படையில் பூத் ஸ்லிப் வழங்கி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்பது வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுமார் 114 அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற இருக்கின்றனர். கடந்த 19ஆம் தேதி முதல் கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டது. அதனை அடுத்து ரங்கபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு சரி செய்வது, வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கமாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 3ஆம் தேதி இறுதிக்கட்ட பயிற்சி வழங்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 46 பேர் போட்டியிட இருக்கின்றனர். இவர்களின் பெயர்களோடு சின்னத்தை வாக்கு இயந்திரங்களில் பொருத்தும் பணி இன்று தொடங்கி உள்ளது.
237 வாக்குசாவடிகளில் பயன்படுத்த 852 பேலட் யூனிட், 284 கட்டுப்பாட்டு இயந்திரம், 308 விவிபாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பேலட் இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications