வேண்டவே வேண்டாம்.. கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!
மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடலுக்குள் பேனா நினைவிடம் அமைக்க தடைக்கோரிய வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் 42 மீட்டருக்கு சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் 3 மீனவர்கள் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
கடலுக்குள் 8,551.13 சதுர மீட்டரில் 42 மீட்டர் உயரத்துக்கு கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆதரவும், எதிர்ப்பும்...
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒரு தரப்பினர் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பேனா நினைவு சின்னம் அமைவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வணிகம் பெருகும் என்றனர். அதேவேளையில் பாஜக, ஆம்ஆத்மி, நாம் தமிழர் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‛‛கடலில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் உடைக்கப்படும்'' என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் தான் சென்னை மெரினா கடலில் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராகவும், பேனா நினைவுசின்ன திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட உத்தரவிட வேண்டும் எனக்கூறி 3 மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர் நல்லதம்பி, சென்னை ராயபுரத்தை சேர்ந்த மீனவர் தங்கம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பாகன் ஆகியோர் சேர்ந்து இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த பொதுநல மனுவில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மனுவில் இருப்பது என்ன?
கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது என்பது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். இந்த திட்டம் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு முரணாக உள்ளது. பேனா நினைவு சின்னம் அமைப்பதன் மூலம் 32 மீனவ கிராமங்களில் சுமார் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேனா நினைவு சின்னம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. கண்துடைப்பாக மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்கள் பாதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றம் ஏற்குமா?
ஏற்கனவே பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வழக்கு ஏற்கனவே தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாய உத்தரவால் தமிழக அரசு பதில் அளித்தது. அதில், ‛‛அனைத்து முறையான அனுமதிகளையும் பெற்ற பிறகே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் தற்போது உச்சநீதிமன்றத்தில் 3 மீனவர்கள் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்த மனுவை நீதிமன்றம் ஏற்குமா? இல்லாவிட்டால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றுமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications