சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை! தமிழ்நாடு ஆதிதிராவிடர் மாநில ஆணையம் உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தீருதவித் தொகையா, அப்படி என்றால் என்ன என இதை படிக்கும் பலருக்கும் கேள்வி எழலாம்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு;

ஆபத்து.. இலங்கை வந்த சீன உளவுக் கப்பல் இந்தியாவுக்கு கிலியை ஏற்படுத்துவது ஏன்? டாப் 4 காரணங்கள்ஆபத்து.. இலங்கை வந்த சீன உளவுக் கப்பல் இந்தியாவுக்கு கிலியை ஏற்படுத்துவது ஏன்? டாப் 4 காரணங்கள்

தீருதவித் தொகை

தீருதவித் தொகை

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தீருதவித் தொகை அரசால் வழங்கப்பட வேண்டும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு விதிகள் 1995 வலியுறுத்துகிறது. 1. வழக்கு பதிவு செய்யப்படுதல், 2. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுதல், 3. எதிர்/ எதிரிகள் தண்டிக்கப்படுதல் என மூன்று கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் எத்தனை சதவிகிதம் தீருதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், எத்தனை நாட்களுக்குள் அவை வழங்கப்பட வேண்டும் என்றும் மேற்படி விதிமுறைகளின் பட்டியல் இணைப்பு ஒன்றில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

பட்டியல் சாதி

பட்டியல் சாதி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், உக்கரம் காளி குளம், அண்ணா நகர் காலனியைச் சேர்ந்த திரு. ப. பெரியகாளையன் என்பவர், அக்கிராமத்தில் இருக்கும் மேட்டுக்கடையில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றபோது, "பட்டியல் சாதியை சார்ந்தவர்கள் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது; தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்" என்று கடையின் உரிமையாளர் கூறியதை எதிர்த்துக் கேட்டதற்காக, அவரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி அவமரியாதை செய்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

இது தொடர்பாக, பெரியகாளையன் 20.03.2022 அன்று கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் சுமார் 500 பேர் திரண்டு அரசூர் - கோபி பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்து, "பட்டியல் சாதியினர் தங்களுக்கு அடங்கிப் போகவில்லை எனில் வன்முறை வெடிக்கும்" என்றும், "இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர்களைக் கண்டதும் தாக்க வேண்டும்" என்றும் பேசியுள்ளனர்.

சாதி வெறி

சாதி வெறி

இச்சூழலில், பெரியகாளையன் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து, சாதி வெறியைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் 26.03.2022 அன்று புகார் அளித்திருந்தார். புகாரை விசாரித்த ஆணையம், 06.04.2022 அன்று இப்புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை ஒன்றினை கோபிச்செட்டிப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளரிடமும், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழங்கப்பட்ட தீருதவித் தொகை தொடர்பான அறிக்கையை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடமும் கேட்டிருந்தது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

ஆனால், காவல் துறை துணைக் கண்காணிப்பாளரின் அறிக்கை தற்பொழுது வரை வரவில்லை. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் 30.06.2022 அன்று தமது அறிக்கையை அனுப்பியிருந்தார். அவ்வறிக்கையில், மனுதாரர் திரு. பெரியகாளையன் என்பவர் அளித்த புகாரைக் கொண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடத்தூர் காவல் நிலைய எனண் 67/2022 இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும், முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தீருதவித் தொகை ரூ.62,500 வழங்க பரிந்துரை செய்து முன்மொழிவு தமக்கு வரப்பெற்றுள்ளது என்றும், மேற்படி தீருதவித் தொகை வழங்க 2022 - 2023 - க்கான நிதி ஒதுக்கீடு அரசிடம் கோரப்பட்டுள்ளது என்றும், எனவே மனுதாரர் திரு. பெரியகாளையன் என்பவருக்கு தீருதவித் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்றும், மேற்படி நிதி ஒதுக்கீடு வரப்பெற்றவுடன் தீருதவித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

 இழப்பீட்டுத் தொகை

இழப்பீட்டுத் தொகை

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனே தராமல், பல்வேறு வழக்குகள் சேரும் வரை காத்திருந்து விட்டு, அதற்குப் பிறகு நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகச் சொல்லி சட்டத்தின் விதிமுறைகள் புறந்தள்ளப்படுவதை ஏற்க முடியாது. ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு எழுதப்பட்டுள்ள 16.05.2022 தேதியிட்ட கடிதத்தில்கூட, 20.05.2022 - க்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் வழக்குகளுக்கான தீருதவித் தொகை கோரப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

தீருதவி நிதி

தீருதவி நிதி

மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தீருதவித் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் மட்டுமின்றி, 2022 - 2023 நிதி ஆண்டுக்கான எதிர்நோக்கு தீருதவி நிதியையும் எவ்விதத் தாமதமும் இன்றி ஆதிதிராவிடர் நல ஆணையரகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Tamil Nadu Adi Dravidar Commission: வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X