"2010 வரலாறு கொஞ்சம் பாருங்க" அண்ணாமலைக்கு எதுவும் தெரியவில்லை.. அமைச்சர் பொன்முடி கிண்டல்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடந்த கால அரசியலும் தெரியவில்லை, நிகழ்கால அரசியலும் தெரியவில்லை என்று அமைச்சர் பொன்முடி கிண்டல் செய்துள்ளார்.
விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் பொன்முடி கூறுகையில், 703 ஆண்கள், 416 பெண்களுக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிஎச்டி பட்டம் பெறுபவர்கள் 3 ஆண்கள். பதக்கம் பெறுபவர்கள் ஆண்கள் 15, பெண்கள் 22 என மொத்தமாக 37 பேர் பதக்கம் பெற்றுள்ளனர்.

சாதித்த மாணவிகள்
ஆகவே கல்லூரியில் பதக்கம் பெற்றதில் மாணவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக படிக்கும் பெண்கள் வளர வேண்டும் என்று நடவடிக்கை எடுத்துவரும் காலத்தில், தற்போது மகளிர் பொறியியல் கல்லூரிகள் படித்து பதக்கம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பட்டம் பெற்ற 1119 மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை
தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை தொடர்பான கேள்விக்கு, மத்திய அரசு தரப்பில் புதிய கல்விக் கொள்கையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றிய பரிந்துரைகள் அளிக்க கடிதம் அளிக்கப்பட்டது. அதற்கான பரிந்துரைகளை தமிழக அரசு சார்பாக எப்போதோ அளித்துவிட்டோம். தமிழக அரசு சுட்டிக்காட்டிய குறைபாடுகளை மாற்றவில்லை. அதனால் மட்டுமே தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றி, தமிழக கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டது.

இந்தி திணிக்க கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கை என்பது இந்தியை திணிப்பதற்காக கொண்டு வந்துள்ளனர். புதிய கல்விக் கொள்கையால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையும். தேசியக் கல்விக் கொள்கை தமிழ் வளர்ச்சிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும். இதன் மூலம் கல்வியை வளர்ப்பதாக இருக்காது. அதேபோல் இந்தி மற்றும் சமஸ்கிருதம் படிப்பவர்களுக்கு மட்டும் ஸ்காலர்ஷிப் வழங்குகிறார்கள். மாநில மொழிக்காக எதுவும் சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை என்று தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு எதுவும் தெரியவில்லை
தொடர்ந்து பொறியியல் கல்லூரி தமிழில் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு, 2010ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்க கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொறியியல் கல்வி கூட தமிழில் இல்லை என்று கூறுகிறார். அவருக்கு கடந்த கால அரசியலும் தெரியவில்லை, நிகழ்கால அரசியலும் தெரியவில்லை. நாம் என்ன செய்ய முடியும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 2010ம் ஆண்டு மூன்று பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழ் வழியில் பொறியியல் கல்வி
தற்போது பட்டம் பெற்ற கல்லூரி மாணவர்களில் கூட, தமிழ் வழியில் படித்து பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பொறியியல் மாணவர்களுக்கு முதல் ஆண்டில் தமிழ் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதற்காகவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மதத்தின் அடிப்படையில் நாடு
தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விவகாரம் பற்றிய கேள்விக்கு, தமிழக ஆளுநரை மட்டும் நீக்க வேண்டும் என்று சொல்லி இருக்க கூடாது. ஒரு ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையான மதச்சார்பற்ற நாடு என்பதற்கு எதிராக பல்வேறு நாடுகள் மதத்தின் அடிப்படையில் இருக்கின்றன. இந்தியாவும் அதுபோல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஆளுநர் செயல்பாடுகள்
அதற்காக தான் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றனர். இதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர் மூலம் பாஜக சிந்தனைகளை பரப்ப முயற்சிக்கிறார்கள். அதுதான் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications