8 புதிய நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.. 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 8 புதிய நிறுவனங்களின் ரூ.2,368 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார். 8 புதிய நிறுவன திட்டங்கள் மூலம் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு நடுவே தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க கையெழுத்திட்டன.

கடந்த 20 ஆம் தேதி 8 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தாகியது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் விக்ரம்சோலார் என்ற நிறுவனம் 5,423 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி 7,542 பேருக்கு வேலைவாய்ப்பும், சிங்கப்பெருமாள்கோவில் - ஒரகடம் நெடுஞ்சாலையில் யோடா என்ற நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மையம் தொடங்கி 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது.
இதேபோல் கடந்த 23 ஆம் தேதி தமிழகத்தில் முதலீடு செய்யும் விதமாக 16 நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அந்த 16 நிறுவனங்களில் ரூ.5.137 கோடி முதலீட்டால் தமிழகத்தில் 8,555 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 8 புதிய நிறுவனங்களின் ரூ.2,368 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார். 8 புதிய நிறுவன திட்டங்கள் மூலம் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications