ஸ்டாலின் டிஸ்சார்ஜ்.. உடல்நிலை எப்படி இருக்கு? அப்போலோ வெளியிட்ட அறிக்கை!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது வீடு திரும்பி இருக்கும் ஸ்டாலின், 3 நாட்களுக்கு பின் வழக்கமான பணிகளைத் தொடரலாம் என்று அப்போலோ மருத்துவமனையில் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 21ஆம் தேதி காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்பின் அவருக்கு அடுத்த நாள் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்பின் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில், முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் இருந்து ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவாறே ஸ்டாலின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோருடன் இணைந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து ஜூலை 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பு மாறுபாட்டுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டன. ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது. பின் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் இதயத் துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனாலும் மருத்துவமனையில் இருந்தவாறே ஸ்டாலின் அரசுப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
நேற்றுடன் 6 நாளான நிலையில், அவரை பார்க்க பல்வேறு தரப்பினரும் வந்தனர். நேற்று மாலை திமுக மண்டலப் பொறுப்பாளர்களை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் அழைத்த ஸ்டாலின், அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதே திமுக தொண்டர்களின் கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 7வது நாளாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் வீடு திரும்பி இருக்கிறார். இதன்பின் ஸ்டாலினின் அரசு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவ சிகிச்சை முடித்து நலமுடன் இருக்கிறார். மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முதல்வர், 3 நாட்களுக்கு பின் வழக்கமான பணிகளை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications