தை-1 தமிழ்ப் புத்தாண்டு .. விஜய் கூட வாழ்த்தினாரே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் இல்லையே!
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தை 1-ந் தேதியா அல்லது சித்திரை 1-ந் தேதியா என்பதில் ஒவ்வொரு ஆண்டும் விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தை-1 தமிழ்ப் புத்தாண்டு என அரசாணை பிறப்பித்திருந்தார். ஆனால் பின்னாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என மாற்றினார். திமுகவினரோ இன்று வரை தை-1 தமிழ்ப்புத்தாண்டு என வாழ்த்துகிற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் 'தமிழ்ப் புத்தாண்டு' என்ற வார்த்தையே இடம் பெறவில்லை என்பது விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.
பழந்தமிழர் வாழ்வியலில் தை-1 தான் தமிழரது புத்தாண்டு நாளாக கொண்டாடப்பட்டது. சித்திரை-1 என்பது புராணக் கதைகளின் அடிப்படையிலானது என்பது தமிழறிஞர்கள்வாதம். பின்னாளில் பண்பாட்டுத் திணிப்பால் சித்திரை 1- தமிழ்ப் புத்தாண்டு என உருமாறியது. அதே நேரத்தில் பன்னெடுங்காலமாகவே எது தமிழர் புத்தாண்டு என்கிற விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி, தை 1-ந் தேதிதான் தமிழர் புத்தாண்டு என அரசாணை பிறப்பித்தார். இதற்கு ஒருதரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் வந்த முதல்வர் ஜெயலலிதா இதனை மாற்றி மீண்டும் சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என மாற்றினார். ஆனாலும் இன்று வரை திமுகவினர் தை-1 தமிழ்ப் புத்தாண்டு என்றே கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமது பொங்கல் திருநாள் வாழ்த்தில் 'தமிழ்ப் புத்தாண்டு' வாழ்த்துகள் என குறிப்பிட்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நடிகர் விஜய் பொங்கல் வாழ்த்துச் செய்தியில், பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! என குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்ப் புத்தாண்டு என குறிப்பிடாத முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழ்ப் புத்தாண்டு எனக் குறிப்பிடவில்லை. முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி: முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொண்ட தமிழரின் தனிப்பெரும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. நானிலம் போற்றும் இந்த நன் நாளினை எழுச்சியோடு இந்தப் புத்தாண்டில் கொண்டாட எதிர்நோக்கியுள்ள உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
பொங்கல் விழா என்பது உழவை, உழைப்பை, சமத்துவத்தை, இயற்கையின் சிறப்பைப் போற்றும் விழா! தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, வீரத்தைப் பறைசாற்றும் பெருவிழா! விளைச்சலின் இன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் விழா! உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, ஊரார் உடன் கொண்டாடிக் களித்திடும் விழா!
பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட நான் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி மாணவக் கண்மணிகளுக்குத் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வரை என மூன்றாண்டுகளில் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்துள்ளது தமிழ்நாடு! பத்தாண்டு காலமாக உறங்கியிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு வீறுநடை போட்டு, அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நிற்கிறது.
எந்தப் பிரிவினரும் ஒதுக்கப்படவில்லை; எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை; எந்தத் துறையும் பின்தங்கி நிற்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறும் அளவுக்குப் பரவலான, சமத்துவமான வளர்ச்சியை அடைந்து காட்டியிருக்கிறோம். நெருக்கடிகள் இல்லாமல் இல்லை; சோதனைகளை எதிர்கொள்ளாமல் இல்லை; இயற்கைப் பேரிடர்கள் தாக்காமல் இல்லை; பாரபட்சத்தால் பாதிக்கப்படாமல் இல்லை! அத்தனையையும் எதிர்கொண்டு சாதித்து வருகிறோம் என்பதுதான் நம் பெருமை!
இன்றைக்கு மக்களின் பேராதரவோடு, கருத்தியல் களத்திலும், தேர்தல் களத்திலும் தொடர் வெற்றிகளைக் குவித்து, எதிரிகளின் கனவுகளைத் தவிடுபொடி ஆக்கி வருகிறோம். திராவிட மாடல் எனும் பாதுகாப்பு வளையம் அமைதி, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், முற்போக்குச் சிந்தனை, முன்னேற்றப் பாதை, கல்வி வளர்ச்சி எனத் தமிழ்நாட்டை இந்திய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றி வருகிறது. வெறும் கொண்டாட்ட நிகழ்வாக இருந்த பொங்கல் திருநாளைப் பண்பாட்டுப் படைக்கலனாகவுமே மாற்றிப் பண்படுத்திய இயக்கத்தின் வழிவந்த அரசு நமது அரசு. ஒற்றுமையோடும், வரலாற்று ஓர்மையோடும் நாம் ஒன்றிணைந்து நிற்கும் வரை தமிழ்நாட்டின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும்.
'எழில் திராவிடம் எழுக!' என்று எழுபதாண்டுகளுக்கு முன் முழங்கினார் தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா! அத்தகைய எழுச்சியை இன்றைய திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது. அவ்வெழுச்சி எந்நாளும் தொடர, தமிழ்நாடு எல்லா நிலையிலும் ஏற்றம் பெற உழைப்போம்! உள்ளமெங்கும் இல்லமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும், தங்கட்டும்!
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து"
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார். இதை உணர்ந்த நமது அரசு, "உழவுத் தொழில் போற்றுதும்; உழவரைப் போற்றுதும்!" என்ற அடிப்படையில், உழவர்களின் மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை நிற்கும். இச்சிறப்புமிகு நன்னாளில் விவசாய பெருங்குடி மக்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குவோம். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் - தமிழர் திருநாள் - திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றாத திராவிட மாடல் அரசு
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு வெளியிட்ட விடுமுறை பட்டியலில் ஏப்ரல் 14- சித்திரை 1-ந் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்திருக்கிறது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து என தெரிவிக்கவில்லை என்கின்றனர் திமுகவினர். அதே நேரத்தில் தை-1ந் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என கருணாநிதி கொண்டு வந்த அரசாணையை கடந்த 4 ஆண்டுகாலத்தில் 'திராவிட மாடல்' அரசு மீண்டும் கொண்டு வந்திருக்கலாமே? அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் கூட இதைக் கூட திமுக அரசு செய்யவில்லையே? என்கிற ஆதங்கத்தைத் தமிழார்வலர்கள் வெளிப்படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications