தமிழ்நாடு சட்டசபையில் நாளை மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல்!
தமிழ்நாடு சட்டசபையில் நாளை ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தாக்கலாகிறது.
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் இந்த மசோதாவை நாளை தாக்கல் செய்கிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்படது. இதற்கு எதிரான ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்தது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது புதிய சட்டம் இயற்ற பரிந்துரைத்திருந்தது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் புதிய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டது.
அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டதால் உரிய விதிகளின் படி தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஆண்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அந்த மசோதா தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இம்மசோதா மீது ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் விளக்கம் அளித்தது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 5 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் திடீரென மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி மசோதாவை திருப்பி அனுப்பினார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எப்படி சட்டம் கொண்டுவரலாம் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார் ஆளுநர் ரவி. இது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில், ஆன்லைன் ரம்மி தடை சட்டங்களைக் கொண்டு வர மாநில அரசுகளுக்குதான் அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆன்லைன் ரம்மியால் ஏற்கனவே பலர் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு இதனை தடை செய்ய தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் 2023-24ம் ஆண்டுக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. தமிழ்நாடு சட்டசபையின் நாளைய கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications