மகளிர் உரிமை தொகை விரைவில் விரிவாக்கம்.. ஆனால் எல்லோருக்கும் கிடையாது.. அரசின் திட்டம் என்ன?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் வகையில் கூடுதல் பயனர்களை இணைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த செய்திகள் வதந்தி என்று நிரூபணம் ஆகி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவை திமுக தலைவரான ஸ்டாலின் எதிர்கொண்டு தேர்தலை சந்தித்தார்.

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை தான் அப்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதில் குறிப்பிட தகுந்த திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதுதான்.
தமிழகம் முழுவதும் பெரிய அளவில் இந்த திட்டம் பேசப்பட்டது. ஏன் இந்தியா முழுமைக்குமே முன்னோடி திட்டமாக இது கருதப்பட்டது இதேபோல் அதிமுகவும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் என அறிவித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஆயிரம் ரூபாய் உதவித்தொகை குறித்து பெரும்பாலும் பேசினார். இதேபோல திமுக மகளிர் அணி தலைவராக இருந்த கனிமொழி இளைஞரணி தலைவராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்கள் பிரச்சாரத்தின் போது இந்த திட்டத்தை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சென்றனர்.
எதிர்பார்த்தது போல திமுக பெருவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் சுமார் ஒரு கோடி 16 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் வருமான வரி செலுத்துவோர், ஏற்கனவே பிற உதவித் தொகைகள் பெறுபவர்கள் உள்ளிட்ட சிலருக்கு வழங்கவில்லை. முதலில் ஒரு கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் புதிதாக திருமணம் முடிந்தவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டது. நிச்சயம் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சரும், சிறப்பு திட்ட செயலாக்குத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பான ஆய்வு கூட்டங்களை எத்தனை மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்து வந்தார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலாக பயனாளிகளை இணைக்க முதலமைச்சர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக,"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலனுக்கான திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையையும், பயனாளிகளிடம் அவை முறையாகச் சென்று சேர்வதையும் உறுதிப்படுத்திக் கொண்டு, கூடுதல் விண்ணப்பங்கள் மற்றும் மக்களின் பிற தேவைகளைக் கவனித்து, தகுதியுடையவற்றை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினேன்" என திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடித்தத்திலும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அருப்புக்கோட்டையில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனக் கூறி இருந்தார். ஆனால் தற்போது மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக நேற்று பரவிய செய்திகளுக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விளக்கம் அளித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும் என்று விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 'மகளிர் உரிமைத்தொகை' என பேசியதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications